உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஜனவரி 21, 2012

கடலூர் மாவட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்

கடலூர்:

             "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க. இளைஞரணி மாநிலத் தலைவருமான அன்புமணி வலியுறுத்தினார்.

           கடலூரைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான நிவாரணம் வழங்க வேண்டும். புதுவை மாநிலத்தைப் போல், கடலூர் மாவட்ட மக்களுக்கும் புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி, பா.ம.க. சார்பில் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேசியது: 

          "தானே' புயல் பாதிப்புகளை முதல்வர் மீண்டும்  பார்வையிட்டு, முழுமையான ஆய்வு நடத்தி, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.÷புயல் பாதித்த கடலூர் மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். கடலூரைக் குடிசையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும். பேரிடர் மாவட்டமாக கடலூரை அறிவிக்க வேண்டும்.÷புதுவை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 10 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

             ஆனால் கடலூர் மாவட்டத்தில் ரூ. 2,500 வழங்கப்படுவது நியாயமல்ல. புயல் நிவாரணத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்குத்தான் செல்கிறது.÷சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகை காலத்தை ஒப்பிடும்போது இவ்வாண்டு டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக ரூ. 3 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதே இதற்குச் சான்று. எனவே கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும். முந்திரித் தோப்புகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய தோப்பு உருவாகும் வரை, 10 ஆண்டுகளுக்கு அரசு மாத ஊதியம் வழங்க வேண்டும். புயல் தாக்கிய பகுதிகளில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

         வீடுகள் சேதம் அடைந்து விட்டன. பள்ளிகளுக்குச் செல்ல முடிவில்லை. பள்ளிகள் சேதம் அடைந்து விட்டன. மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை. எனவே 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். அனைவரையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அரசு அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளான தூக்கணாம்பாக்கம், பாலூர், வழிசோதனைபாளையம், காடாம்புலியூர் ஆகிய இடங்களில் 22-ம் தேதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

         லட்சக்கணக்கான மரங்கள் நடும் பணியை, 29-ம் தேதி தொடங்க இருக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மனநல மற்றும் விவசாய ஆலோசனை வழங்கும் வகையில், குறிஞ்சிப்பாடியில் கருத்தரங்கு நடத்தப்படும் என்றார் அன்புமணி.

        ஆர்ப்பாட்டத்துக்கு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலர்கள் ப.சண்முகம், கு.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் வரவேற்றார். மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் இரா.கோவிந்தசாமி, மாநில இளைஞரணிச் செயலர் அறிவுச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior