உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 14, 2012

கடலூரில் தானேபுயல் நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

இது குறித்து, கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவள்ளி கூறியது: 

             வீடுகளுக்கான நிவாரணத் தொகை பெறுவதில், ஏதேனும் குறைகள் இருந்தால், 1700 என்ற இலவச எண்ணிலும், 230 555 மற்றும் 231 653 ஆகிய எண்களிலும், பயனாளிகள் புகார் தெரிவிக்கலாம். வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குவது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அமுதவள்ளி கூறினார்.

         கடலூரில், "தானே' புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவதில், மாவட்ட நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பு இல்லாததால், 5,000 ரூபாய் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கு, குறைந்த தொகையும், சிலருக்கு, நிதியே கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி வட்டம், புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி, முருகன் என்பவர் கூறியது: 

            வீடுகளுக்கான நிவாரணத் தொகை, வி.ஏ.ஓ., மூலம் வழங்கப்படும், என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், எங்கள் பகுதியில், அரசு அலுவலர் அல்லாத தனி நபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பண பட்டுவாடா செய்கின்றனர். அவர்கள், பணம் தந்ததற்கான அத்தாட்சிக்கு, வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்குகின்றனர்.

               "தானே' புயல் நிவாரணம் என அச்சிடப்பட்ட சீட்டில், நிவாரணத் தொகை பெறுவோரின் குடும்ப அட்டை எண், அவர்கள் வசிக்கும் கிராமம் ஆகிய விவரங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள எங்கள் கிராமத்தில், 5,000 ரூபாய் தர வேண்டிய பலருக்கு, 2,500 ரூபாயும், சிலருக்கு அத்தொகைக் கூட தரப்படவில்லை. இந்நிவாரணத் தொகையுடன் தர வேண்டிய, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி மற்றும் சேலை, எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை.

                இந்நிவாரணத் தொகை வழங்குவதில், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, அரசு நிர்ணயித்துள்ள பயிர் இழப்பீடு தொகையும் எங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 100 க்கும் மேற்பட்டோர், அவர்களின் ரேஷன் கார்டை, மாவட்ட கலெக்டரிடம், "சரண்டர்' செய்ய முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு முருகன் கூறினார்.

புறங்கனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துசாமி என்பவர் கூறும்போது, 

               ""புயலில் என் குடிசை முற்றிலும் சேதமடைந்து விட்டது. எனக்கு, 2,500 ரூபாய் தான், நிவாரணத் தொகை தரப்பட்டது. என் வீட்டை சரிசெய்ய, குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். தமிழக அரசு, வீடுகளுக்கு கூடுதல் நிவாரணத் தொகை தந்தால் பேருதவியாக இருக்கும்,'' என்றார்.














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior