கடலூர்:
கடலூர் நகராட்சியில் புயலால் உருவான 1500 டன் குப்பைகளை, முழுமையாக அகற்றும் பணியை, ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் பிரதானச் சாலைகளில் குப்பை அகற்றும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். புயலினால் கடலூர் மாவட்டத்தில் விளம்பர போர்டுகள், மரங்கள், கூரைகள் மற்றும் பல்வேறு பொருள்கள் தூக்கி எறியப்பட்டு, குப்பைகளாக மாறியுள்ளன. சாலைகளில் விழுந்துக் கிடந்த மரங்கள், கிளைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த பொருள்களை அகற்றும் பணி, புயல் பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு நாள்களிலேயே முடிக்கப்பட்டது.
முக்கியப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியும் முடிவடைந்து உள்ளது. கடலூர் நகராட்சிப் பகுதியில் மட்டும் இன்று வரை 1,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தை சுத்தமான, சுகாதாரமான மாவட்டமாக மாற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 683 ஊராட்சிப் பகுதிகளில், புயலினால் ஏற்பட்டுள்ள குப்பைகள் மற்றும் படிந்துக் கிடக்கும் மண் மேடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் நகராட்சிப் பகுதியில் குப்பைகளை முழுமையாக அகற்றும் பணி தினந்தோறும் 5 வார்டுகள் வீதம், நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை முக்கிய சாலைகளில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. இப்பணிகளில் 230 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இப்பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் டவுன்ஹால் பகுதியில் தொடங்கி வைத்தார்.
பின்னர் நகராட்சி அலுவலகம், நியூசினிமா திரையரங்கம், அண்ணா மேம்பாலம், பேருந்து நிலையப் பகுதி, முதுநகர் ஆகிய இடங்களில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, சார் ஆட்சியர் கிரண் குராலா, நகராட்சித் தலைவர் சி.கே.சுப்ரமணியன், துணைத் தலைவர் குமார், ஆணையர் விஜயகுமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக