கடலூர்:
இந்தியாவிலேயே வளர்ச்சி குறைந்த மாநிலமாக உள்ள பிகாரில் உள்ள ரயில்வே வளர்ச்சி கூட தமிழகத்தில் இல்லை என்று கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், புவனேஸ்வர் வாராந்திர ரயில் ஆகியவை கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்திலும், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்ததற்காக கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரிக்கு, தமிழ்நாடு ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் பாராட்டு விழா கடலூரில் சனிக்கிழமை நடந்தது.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து கே.எஸ்.அழகிரி பேசியது:
தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் நிறைய ரயில்கள் இயக்கப்பட வேண்டியிருக்கிறது. ரயில்வே துறையால் தமிழகத்துக்குக் கிடைத்த வாய்ப்புகள், வசதிகள் மிகவும் குறைவு. இந்தியாவிலேயே வளர்ச்சி குறைந்த மாநிலமாக உள்ள பிகாரில் உள்ள ரயில்வே வளர்ச்சி கூட தமிழகத்தில் இல்லை. அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாத மாநிலமும் தமிழகம்தான். விழுப்புரம்-செஞ்சி-நகரி, மற்றும் கடலூர்-புதுவை-சென்னை புதிய ரயில்பாதைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை. காரணம் தமிழகம், புதுவை மாநில அரசுகள் இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தவதில் ஆர்வம் காட்டவில்லை. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும், அகலப் பாதையான பிறகும் இயக்கப்பட வேண்டும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது எந்தெந்த ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்றனவோ, அவற்றில் அகலப் பாதையாக மாற்றிய பிறகும் நின்று செல்ல வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைந்து வருகிறது. நிலம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளித்துத் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஃபோர்டு, ஹூண்டாய் கார் தொழிற்சாலைகள், அண்மையில் தங்கள் கார் தொழிற்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு, குஜராத் மாநிலம் சென்றுவிட்டன. நமக்கு 50 ஆயிரம் இளைஞர்களின் வேலை வாய்ப்பு தவறிவிட்டது. பொதுநல அமைப்புகள் பெரிய விஷயங்களைப் பற்றி பேச வேண்டும். அரசியல் கட்சியினருக்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் பொதுநல அமைப்புகள் பேசுவது வலிமையாக இருக்கும். அவை மக்களின் குரலாக இருக்கும். கடலூரில் கொசுத் தொல்லை பெரும் பிரச்னையாக உள்ளது. மக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் இப்பிரச்னை குறித்து, பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்த வேண்டும் என்றார் அழகிரி.
நிகழ்ச்சிக்கு ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ச.சிவராமன் தலைமை வகித்தார். ரயில் பயணிகள் நலச் சங்கம் தயாரித்த பயணிகள் விழிப்புணர்வு கையேட்டை கே.எஸ்.அழகிரி வெளியிட, சங்க கெüரவத் தலைவர் அருள் பெற்றுக் கொண்டார். ரயில்வே பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் வர்த்தக பிரமுகர் மகாவீர்மல் மேத்தா, ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் பி.சிவகுமார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், வழக்கு தொடர்ந்த வர்த்தகப் பிரமுகர் கு.நாகராஜன், வழக்கறிஞர் சி.ஏ.தாஸ் ஆகியோரும் பாராட்டி கெüரவிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக