உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், பிப்ரவரி 13, 2012

கடலூர் புனித வளனார் கல்லூரியில் தகவல் தொடர்பு குறித்த கருத்தரங்கு

கடலூர்:
            புதிய அறிவியல் ஆய்வுகளுக்கான மாணவர்களை, பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது இல்லை என்று, பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன, முன்னாள் விஞ்ஞானி டாக்டர் கே.சம்பத் குற்றம் சாட்டினார்.
கடலூர் புனித வளனார் கல்லூரி இயற்பியல் துறை சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகவல் தொடர்பு குறித்த கருத்தரங்கில் டாக்டர் சம்பத் பேசியது: 
            பல்வேறு காலங்களில் பொறியியல், மருத்துவம், தணிக்கையாளர் போன்ற தொழில் கல்விப் படிப்புகளை விரும்பிய பெற்றோரும் மாணவர்களும், தற்போது கணினி அறிவியல் பாடத்தைப் படிக்க விரும்புகிறார்கள்.  மேற்கண்ட படிப்புகள் அனைத்துமே நேற்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இன்றைய வளர்ச்சி ஆகும்.  மாணவர்களின் விருப்பங்களை கருத்தில் கொள்ளாமல், வேலைவாய்ப்பை மட்டுமே மனதில் கொண்டு, மாணவர்களை பெற்றோர் கட்டுப்படுத்துகிறார்கள். நமது பல்கலைக்கழகங்கள், புதிய சிந்தனைகளையும் புதிய அறிவையும் வளர்க்கும் ஆய்வுக் கேற்ற மாணவர்களை உருவாக்குவதற்குப் பதில், தொழிற்கூடங்களின் தேவைகளையும் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப படிப்புகளில் அதிக அக்கறை கொள்கின்றன.  
            பொறியியல் மற்றும் மருத்துவம் பயின்ற மாணவர்களில் ஏராளமானோர், விஞ்ஞானிகளாக பிரகாசிக்கிறார்கள். அறிவியல் ஆய்வுப் பணிகளில் சேர, மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.  இந்தியாவில் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. அவர்களிலும் ஒரு சிலரே அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.  வருங்காலத்தில் இப்போதுப் போல் விஞ்ஞானிகளின் தேவை, ஐந்து மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் டாக்டர் சம்பத்.  கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமை வகித்தார்.
             இயற்பியல் துறைத் தலைவர் ஏ.கிறிஸ்டி ஃபெர்டினாண்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இன்றைய காலக் கட்டத்தில் அறிவியல் வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், கல்லூரி சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு சார்பில், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை, டாக்டர் சம்பத் நட்டார். இதில் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior