புயலுக்குப்பின் துளிர்விட்டு பூத்துக் குலுங்கும் மாமரம்.
கடலூர்:
தானே புயல் புரட்டிப் போட்டதால் பாதிக்கப்பட்ட நிலையிலும், கடமை தவறாத மாமரங்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்களில், 625 ஏக்கரில் மாமரங்கள் இருந்தன.
இதில் 300 ஏக்கர் மாமரங்கள் முழுவதும் புயலில் வேருடன் சாய்ந்து அழிந்த விட்டதாக வேளாண் துறை தெரிவிக்கிறது. ஏனைய 325 ஏக்கரில் உள்ள மாமரங்கள் பெரும்பாலானவை கிளைகள் ஒடிந்தும், இலைகள் முற்றிலும் உதிர்ந்தும், மீண்டும் தேருமா என்ற நிலையில் காணப்பட்டன. கிளைகள் பலவும் முறிந்து காணப்பட்ட மா மரங்கள் பலவற்றில், அண்மையில் இலைகள் துளிர்விடத் தொடங்கியதைத் தொடர்ந்து, இப்போது பூக்களும் கொத்து கொத்தாக பூக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து சங்கொலிக்குப்பம் விவசாயி ராமலிங்கம் கூறுகையில்,
10 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மாமரங்களில் பல மரங்கள், புயலில் சேதம் அடைந்து விட்டன. ஏராளமான மரங்கள் ஒடிந்தும், சிதைந்தும் பரிதாபமாகக் காணப் பட்டன. அவற்றில் சில மரங்கள் துளிர் விட்டு பூக்கவும் தொடங்கி இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கணிசமான அளவுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். பொதுவாக பிற மாவட்டங்களில் இருந்து மாம்பழம் வரத்து குறையும் தருவாயில், கடலூர் மாவட்ட மாம்பழங்கள் சந்தைக்கு வரும். எனவே கடலூர் மாவட்ட மாம்பழ விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் புயல் பாதிப்பால், மாம்பழ வருவாய் இனி கிடைக்குமா என்றே தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து வேளாண் அலுவலர்கள் கூறுகையில்,
கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாத இறுதியில் மாமரங்கள் பூக்கத் தொடங்கும், மே மாதம் பழங்கள் விற்பனைக்கு வரும். புயலில் முறிந்து கிடந்த மாமரங்கள் பலவற்றில் துளிர் வந்து இருக்கிறது. பூக்கள் பூக்கவும் தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு உருவான புதுத் துளிரில் இருந்து வெளிவரும், பூக்களில் பிஞ்சு பிடிக்குமா என்பது சந்தேகமே. அடுத்த ஆண்டுதான் இவற்றில் பழங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்கள். முறிந்து கிடந்த மா மரங்கள் ஆனாலும் சீசன் வந்ததும், துளிர்விட்டு பூத்துக் குலுங்கி, தங்களது கடமையை தவறாமல் நிறைவேற்றி விட்டன. பூக்களை காய்களாக, கனிகளாக மாற்றும் அற்புதத்தை இயற்கைதான் நிகழ்த்த வேண்டும். படம்: வி.சிவபாலன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக