உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 21, 2012

கொள்ளுக்காரன் குட்டை துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை

பண்ருட்டி:
 
           பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டை பெட்ரோல் பங்க் ஒன்றில் துப்பாக்கி முனையில் ரூ.55 ஆயிரம், ஞாயிற்றுக்கிழமை கொள்ளை அடிக்கப்பட்டது.
 
          கொள்ளையனைப் பிடிக்க முயன்ற லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் குண்டு காயம் அடைந்தார். தப்பியோடிய இரு கொள்ளையர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தை சேர்ந்த லதாவுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ளது. சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் (45) ஆகியோர் சனிக்கிழமை இரவுப் பணியில் இருந்துள்ளனர்.
 
           ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு மூன்று கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியால் தரையில் சுட்டும், கத்தியைக் காட்டி மிரட்டி, ஊழியர்களைக் கட்டிப் போட்டு விட்டு ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் சென்ற சற்று நேரத்தில் பாவைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கோபாலகிருஷ்ணன், டீசல் போட வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் இல்லாத நிலையில், பங்க்கின் உள்ளே சென்று பார்த்தபோது, ஊழியர்கள் கார்த்திகேயன், சண்முகம் இருவரும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததையும், ரூ.55 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.உடனே லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் தனது நண்பரான மருங்கூரைச் சேர்ந்த அருளுக்கு போன் செய்து கார் எடுத்து வரச் சொல்லி கொள்ளையர்களை பின் தொடர்ந்துள்ளனர். காடாம்புலியூர் காந்தி நகர் அருகே நடந்துச் சென்ற கொள்ளையர்களை கோபாலகிருஷ்ணன் பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் சுட்டதில் குண்டு பாய்ந்து கோபாலகிருஷ்ணன் காயம் அடைந்தனர்.
 
           சம்பவ இடத்துக்கு காடாம்புலியூர் போலீஸôர் விரைந்து வந்தனர். இதில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீஸôர் துணிச்சலுடன் சென்று ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்துள்ளது. ஏனைய இருவர் தப்பி ஓடி முந்திரிக் காட்டில் மறைந்துவிட்டனர். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
 
ஐ.ஜி., ஆய்வு: 
 
        தகவல் அறிந்த வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு, காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு விரைந்தார்.
 
பின்னர் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு அளித்த பேட்டி
 
         முந்திரிக் காட்டில் மறைந்த இரு கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் .கொள்ளையனைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டினார். பின்னர் கொள்ளை நடந்த பெட்ரோல் பங்க்கையும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற முந்திரிக் காட்டையும் பார்வையிட்டார்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.பகலவன், பண்ருட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 கருத்துகள்:

  • திண்டுக்கல் தனபாலன் says:
    22 பிப்ரவரி, 2012 அன்று PM 12:31

    தகவலுக்கு நன்றி நண்பா ! உங்கள் தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறது ! கவனிக்கவும் !

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior