உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், மார்ச் 15, 2012

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயலால் பாதித்தவர்களுக்கு சமூக மறுவாழ்வு பயிற்சி

கடலூர் :

       "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய முதன்மை பயிற்சி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார்.

        "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர் மற்றும் விவசாயிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

      இதற்காக முதல் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70 ஆசிரியர்களுக்கு உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு பற்றிய இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடந்தது. முகாமிற்கு அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். மனநல டாக்டர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.

கலெக்டர் ராஜேந்திர ரத்னு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியது ு:


          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு மறுவாழ்விற்காக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கடலூர் மாவட்ட மக்கள் ஒன்பது வகையான பேரழிவுகளை சந்தித்துள்ளனர். ஒவ்வொரு பேரழிவும் ஒரு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தொடர் பேரழிவுகளால் மாவட்ட மக்கள் பொருளாதாரம், சமுதாயம், மனம் மற்றும் உடல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே உள்ள மன அழுத்தத்தைப் போக்கி மீண்டும் அவர்களை புத்துணர்வு ஏற்படுத்தவே இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொருவரிடமும் உள்ள மன அழுத்தத்தை வெளிக் கொண்டு வர, பயிற்சி வகுப்பிற்கு வந்துள்ள ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசினார். நிலைய மருத்துவ அதிகாரி கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

      அதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்ற 70 ஆசிரியர்களுக்கு, பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மருத்துவக் கழக பேராசிரியர் சேகர் பயிற்சியளித்தார். இந்த முகாம் இன்றும் தொடர்கிறது. முகாமில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு உளவியல் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் மன அழுத்தத்தைப் போக்க உரிய பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior