உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

கடலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியானது: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:

  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்துத் தேர்வு வினாத்தாள் கடலூரில் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.

          ஈரோடு, தருமபுரி ஆகிய பகுதிகளில் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடலூரிலும் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய பகுதியில் 49 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 52 பேர் தேர்வு எழுதினர்.


       கடலூர் புனித வளனார் கல்லூரி தேர்வு மையத்தில், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கம்பன் நகரைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் தேர்வு எழுதினார்.
 தேர்வு எழுதி முடிந்ததும் வெளியே வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மஞ்சக்குப்பம் மைதானத்தின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள் போன்று கையால் எழுதப்பட்ட 15 பக்கங்கள் கொண்ட ஜெராக்ஸ் நகல் கிடந்ததை பார்த்து எடுத்தார். அதில் அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்கள் சரியாக குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.


இதுகுறித்து ராஜாகண்ணு கூறியது:


       எம்.காம். பட்டதாரியான நான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 2-வது முறையாக எழுதுகிறேன். மஞ்சக்குப்பம் மைதானத்தில் விடைகள் அடங்கிய வினாத்தாளை கண்டெடுத்தேன். இதை வைத்து தேர்வு எழுதியவர்கள் எளிதில் தேர்ச்சிப் பெற்று வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் என்னைபோன்று கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போய்விடும். முறைகேடு நடந்துள்ள இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.


         கடலூரில் கேள்வித்தாள் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, விசாரணை முடிந்தால்தான் உண்மை நிலை தெரியும் என்றார் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior