தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளில், சிறிய பணிகளை மேற்கொள்ள, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது. இதில் வேலை செய்பவருக்கு, எட்டு மணி நேர வேலைக்கு, அதிகபட்சமாக, 119 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. வேலை செய்யும் நேரத்துக்கு ஏற்ப, இத்தொகை முடிவு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலை செய்ய, 90 சதவீதம் பெண்களே வருகின்றனர். 10 சதவீதம், வயது முதிர்ந்த ஆண்கள் வருகின்றனர். எனினும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் இத்திட்டம் நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நூறு கோடி அதிகம்
இந்த நிதியாண்டில், தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கென, 3,572 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த டிச., 31ம் தேதி வரை, 1,962 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டு, டிசம்பர் வரை செலவிட்ட தொகையை விட, 100 கோடி ரூபாய் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் தொகையில் 80 சதவீதத்தை, தமிழக அரசு செலவிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 2,700 கோடியில், 2,300 கோடி செலவிடப்பட்டது. மீதம் 400 கோடி ரூபாய், இந்த ஆண்டில் சேர்க்கப்பட்டது.
சீரமைப்பு பணிக்கு...
இந்த ஆண்டுக்கு, இதுவரை செய்துள்ள செலவு போக, மீதமுள்ள தொகையில் பெரும் பகுதி, கடலூர் மாவட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட தனியார் நிலங்கள் மற்றும் பொது இடங்களில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், சீரமைப்பு பணிகளும் அதிகளவில் நடக்கும் என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக