உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அனல் மின் நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனல் மின் நிலையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 06, 2011

என்.எல்.சி. சேர்மன் அன்சாரி மீது ரூ.10 ஆயிரம் கோடி முறைகேடு புகார்: சி.பி.ஐ. வழக்குப்பதிவு

நெய்வேலி:


            நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சேர்மன் அன்சாரி. இவர் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக ஏற்கனவே புகார்கள் கூறப்பட்டன.  

              இந்த நிலையில் 2009-ம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கன்வேயர் பெல்ட் அமைக்க சாதனங்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.40 கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.  இதுதொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. என்.எல்.சி. நிறுவனம் உள்பட 9 இடங்களில் 2010-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனாலும் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


              இந்த நிலையில் நெய்வேலி தொழிற்சங்க நிர்வாகி செல்வராஜ் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் என்.எல்.சி. சேர்மன் முறைகேடு செய்துள்ளார்.  ரூ.10 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. எனவே அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.  அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரும்படி கூறினார்கள்.  

               இதையடுத்து செல்வராஜ் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி யூசுப் அலி என்.எல்.சி. சேர்மன் அன்சாரி மீது சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.  இது சம்பந்தமாக விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் கூறினார்.






Read more »

திங்கள், மே 23, 2011

நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதி: பழ. நெடுமாறன்


            
             நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு வழங்குவது அநீதியானது என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.  
 
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் அளித்த பேட்டி: 
 
                 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் சிபிஐ கைது செய்திருக்கிறது. எனவே, சிபிஐ வேண்டுமென்று செய்தது எனக் குறைகூறுவது சரியானது அல்ல.  கனிமொழி குற்றம் செய்யவில்லை என்று சொன்னால், அதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டு வெளிவருவதுதான் சரியாக இருக்கும். கனிமொழி கைதுக்கு உள்நோக்கம் கற்பிப்பது குற்றம் உள்ள நெஞ்சின் குறுகுறுப்பைக் காட்டுகிறது.  தன் மீதும், தனது குடும்பத்தின் மீது வஞ்சகம் தீர்க்கும் படலத்தை சிறப்பாக சிலர் நடத்தி முடித்திருக்கிறார்கள் என்று கூறும் கருணாநிதி, வஞ்சகம் செய்தவர்களை பகிரங்கமாக வெளியில் கூற வேண்டும்.  
 
             அலைக்கற்றை விவகாரத்தில் கைதாகி சிறையிலுள்ள கட்சியின் கொள்கை விளக்க பிரசார குழுச் செயலரான ஆ. ராசாவை பார்க்கச் செல்ல விரும்பாதவர், மகளைப் பார்க்க செல்கிறார். தமிழகத்தில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளுக்கு உரிய தண்டனையை அனுபவிக்கிறது. மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். எனவே, புதிய அதிமுக அரசு நல்ல அரசாகத் திகழ வேண்டும். நெய்வேலியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை இலங்கைக்கு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.  தமிழகத்தில் நிலக்கரியை வெட்டியெடுத்து, தமிழகத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்காமல், தமிழர்களுக்கு எதிரான இலங்கைக்கு வழங்குவது மிகப் பெரிய அநீதியாகும் என்றார் நெடுமாறன்.
 
 

Read more »

வியாழன், ஏப்ரல் 07, 2011

1,788 கோடி யூனிட் மின்னுற்பத்தி: என்.எல்.சி. சாதனை


நெய்வேலி:
 
           நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் (2010-11) முடிவடைந்த நிதியாண்டில் 1,788 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.  
 
             சுரங்கங்களில் இருந்து 231 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்தும் சாதனைப் படைத்திருப்பதாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இதுதொடர்பாக என்.எல்.சி. மக்கள் தொடர்புத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
 
              நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 3 சுரங்கம், 3 அனல்மின் நிலையங்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சுரங்கம், அனல்மின் நிலையமும் உள்ளது.  மேற்கண்ட சுரங்கங்களிலிருந்து கடந்த நிதியாண்டில் (2010-11) 577 கோடி கனஅடி மேல் மண் நீக்கப்பட்டு, 231 லட்சத்து 44 ஆயிரத்து 200 டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.  இது கடந்த நிதியாண்டை (2009-10) காட்டிலும் 3.61 சதவீதம் அதிகமாகும்.  
 
            அதேபோன்று மின்னுற்பத்தியை பொறுத்தவரை, அனல்மின் நிலையங்களில் இருந்து 1,787 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்னுற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை (2009-10) காட்டிலும் 1.27 சதவீதம் அதிகமாகும்.  மின் சக்தி ஏற்றுமதியை பொறுத்தவரை, இந்த மின் நிலையத்தின் அனல்மின் நிலையங்களில் இருந்து 1,496 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்துள்ளது. 
 
             இது 2009-10 நிதியாண்டை காட்டிலும் 0.96 சதவீதம் அதிகமாகும்.  மேலும் என்.எல்.சி. 2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் விரைவில் இப்புதிய மின் நிலையத்திலும் மின்னுற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், ஜனவரி 27, 2011

ஒரு மணி நேரத்தில் 45 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையங்கள்: என்.எல்.சி தலைவர் அன்சாரி


நெய்வேலி:

            குடியரசு தினம், நெய்வேலி நகரில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. தலைவர் அன்சாரி, நெய்வேலி நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

             பாரதி விளையாட்டரங்கில் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் என்.எல்.சி. பாதுகாப்புப்படை, தீயணைப்புப்படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை, ஊர்க் காவல்படை, தேசிய மாணவர்படை, நாட்டுநலப் பணித்திட்ட மாணவ மாணவிகள், சாரண சாரணியர், விளையாட்டு வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் விழா மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சி, என்.எல்.சி. நிர்வாகத்துறை இயக்குனர் ஆச்சார்யா வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடர்ந்து குடியரசு தின செய்தி வழங்கிய அன்சாரி கூறியது:-

 
              இந்தியா, பொருளாதாரத்தில் வலிமை மிகுந்த ஒரு நாடாக அனைவராலும் மதிக்கப்பட்டால் தான், சர்வதேச சமூகத்தில் நமது நாடு ஒரு முக்கிய அங்கத்தினைப் பெறும். இதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. இம்முயற்சியானது, தேசத்தின் வளர்ச்சிக்காக பொதுத்துறை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையும் கூட. இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் 8.5 சதவீதம் சீரான பொருளாதார வளர்ச்சியை பெற்று வருகிறது.

              தேசத்தின் வளர்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் பங்கும் வளர்ந்து வரும் வகையில், நிறுவனத்தின் செயல்பாடுகளை, பணியாளர்கள் தங்கள் கடின உழைப்பால் மேலும் மேம்படுத்த வேண்டும். பழுப்பு நிலக்கரியை மட்டுமே எரிபொருளாகக் கொண்டு, செயல்பட்டு வரும் பட்சத்தில், என்.எல்.சி பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருப்பதால், நிலக்கரியை எரி பொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களை அமைக்க என்.எல்.சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

             புதிய அனல் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அடிப்படையிலான கொள்கை, என்.எல்.சிக்கு ஒரு சவா லாக இருப்பினும், தகுந்த நேரத்தில் என்.எல்.சி மேற் கொண்ட விரைவான நட வடிக்கைகளால், ராஜஸ் தான் மாநிலம் பித்நோக் பகுதியிலும், பர்சிங்சர் பகுதியிலும், தமிழகத்திலும், உத்திரப்பிரதேச மாநிலத்திலும் நான்கு புதிய அனல் மின் நிலையங்களை என்.எல்.சி. நிறுவனமே அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

              ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்கள் (ஒரு மணி நேரத்திற்கு தலா இரண்டரை லட்சம் யூனிட்) பழுப்பு நிலக்கரி மூலமும் தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்களும் (ஒரு மணி நேரத்திற்கு தலா இரண்டரை லட்சம் யூனிட்) நிலக்கரியின் மூலமும் இயங்கும் தன்மை கொண்டவை. இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

வியாழன், ஜனவரி 20, 2011

சிதம்பரம் அருகே 1100 ஏக்கரில் 3600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின் நிலையம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை அருகே 1100 ஏக்கரில் ஐஎல் எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி 3,600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின்நிலையத்தை தொடங்கவுள்ளது.  தற்போது நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மின்நிலையம் இயங்கும் என தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.  

இதுகுறித்து சிதம்பரத்தில் புதன்கிழமை தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தது:  

              இந்த மின்நிலையம் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தோனேசியாவிருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக 1,200 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.  

            மேலும் தமிழ்நாடு பவர் கம்பெனி, ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து புதுச்சத்திரத்தில் கிராமப்புற மகளிர் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது. இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் இயந்திரங்களும், உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன.  கொத்தட்டை மற்றும் வில்லியநல்லூருக்கு உட்பட்ட கிராமங்களான பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் இயங்கும் சுமார் 20 மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுமார் 60 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு தொழிற்பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.  

           தொழிற்பயிற்சி முடிந்தவுடன் அதில் தேர்வு பெறும் மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க ஏதுவாக மேலும் 70 தையல் இயந்திரங்களை நிறுவவும் ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி திட்டமிட்டுள்ளது.  கொத்தட்டை, அரியகோஷ்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்குப்பம், வி.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, இந்திராநகர், சின்னூர் பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வெல்டிங், பிட்டர் போன்ற தொழிற்கல்வி வழங்க எங்களது நிறுவனம் மங்களம் ஐடிஐ, முருகேசன் ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களில் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முழுகல்வி கட்டணத்தையும் வழங்கி படிக்க வைக்கவுள்ளோம்.  

             இதன் மூலம் 2011-ம் ஆண்டில் மட்டும் 75 மாணவர்களை வேலைத் தகுதி பெற முடியும் என எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்.ரமேஷ் உடனிருந்தார்.

Read more »

சனி, பிப்ரவரி 13, 2010

தனியார் அனல் மின் நிலையம்: மீனவர் பேரவை எதிர்ப்பு

கடலூர்:

           கடலூர் அருகே அமைய இருக்கும் தனியார் அனல் மின் நிலையத்துக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், செயலாளர்  கே.முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அமைந்து இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதால், மீனவர்களின் தொழில் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுக்குப்பம் அருகே தனியார் அனல் மின் நிலையம் அமைக்க  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் அருகே துறைமுகம் ஒன்றும் கட்டப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் அங்கு அமைக்கப் பட்டால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே இந்த தனியார் அனல் மின் நிலையத்தை மீனவர் பேரவை கடுமையாக  எதிர்க்கிறது. தனியார் அனல் மின் நிலையம் அமைய இருப்பதைக் கண்டித்து, அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, இம்மாதம் 25-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior