உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 29, 2010

ஓட்டை உடைசல் பஸ்களால் பரிதவிக்கும் பயணிகள்

பண்ருட்டி:

                    அரசு பஸ்கள் நடுவழியில் பழுதடைந்து நிற்பதும், அதில் பயணம் செய்வோர்  அவதி அடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

                    தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுமக்களின் வசதிக்காக நகரப் பகுதியில் நகர பஸ்களும், நீண்டதூர பயணத்துக்கென விரைவு பஸ்களையும் இயக்குகிறது. டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏர் பஸ், சூப்பர் ஃபாஸ்ட், எக்ஸ்பிரஸ் என பல்வேறு பெயர்களில் பஸ்களை இயக்கி வசதிக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கிறது.÷இவை வெவ்வேறு பெயர்களில் இயக்கப்பட்டாலும் சேவையில் வித்தியாசமில்லை என்றும் அனைத்து பஸ்களுமே பராமரிப்பின்றி இயக்கப்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

                 இந்நிலையில் சென்னை-கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை வழித் தடத்தில் இயங்கும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பஸ்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த பஸ்கள் எந்த நிலையில் இருந்தாலும் பயணிகள் வேறுவழியின்றி அவசரத்துக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

                      நீண்டதூர அரசு விரைவு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள், மேற்கூரைகள் உடைந்து சேதம் அடைந்துள்ளதால் மழைக்காலத்தில் சாரல் அடிப்பதாலும், மழைநீர் உள்ளே ஒழுகுவதாலும் பயணிகள் பெரும் பாதிப்படைகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. நீண்ட தூரம் இயக்கக்கூடிய பெரும்பாலான பஸ்களில் ஸ்டெப்னி, ஜாக்கி உள்ளிட்டவை இல்லை. இதனால் டயர் பஞ்சராகி பஸ் நடுவழியில் நின்றால், டயரை மாற்றி பயணத்தை தொடர முடியாத நிலை உள்ளது.

                      உதாரணமாக, சனிக்கிழமை சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வந்துகொண்டிருந்த விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக விரைவு பஸ், பண்ருட்டி அருகே டயர் பஞ்சர் ஆனதால் பண்ருட்டி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோரை பணிமனையில் இறக்கி விட்டதால் அவர்கள் மாற்று வண்டியில் ஏறிச்செல்ல பணிமனையில் இருந்து மூட்டை முடிச்சுகளுடனும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடனும் தேசிய நெடுஞ்சாலைக்கு நீண்டதூரம் நடந்து செல்ல வேண்டியதாயிற்று. அங்கு வந்த பிறகும் அவர்கள் மாற்று வண்டிக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். அவசரமாக செல்ல வேண்டிய பலர் அவ்வழியே வந்த டவுன்பஸ்ஸில் ஏறிச் சென்றனர்.

தள்ளுவண்டி...

              கடந்த இருவாரங்களுக்கு முன் கடலூரில் இருந்து வேலூர் செல்லும் அரசு விரைவு பஸ் பண்ருட்டி பஸ் நிலையம் அருகே பழுதாகி நின்றது. இதில் வந்த பயணிகளே பஸ்சை  தள்ளி பஸ்நிலையம் அருகே ஓரம்கட்டிவிட்டு வேறு வண்டியில் சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து கும்பகோணம் சென்ற பஸ் பஞ்சராகி நான்குமுனை சந்திப்பில் நின்றது. இந்த வண்டியில் ஸ்டெப்னி, ஜாக்கி இல்லாததால் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அதே இடத்தில் நின்றது.

                       ""விரைவு பஸ் என்ற பெயரில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்துக் கழகம் நாங்கள் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திலும், எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் சென்றுசேரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை'' என்பதே பெரும்பாலான பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. அரசுப் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் இதனை சிந்தித்து உருப்படியான நடவடிக்கை எடுத்தால் சரி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior