உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 29, 2010

மனசாட்சி இல்லாத நகராட்சி; குமுறும் கடலூர்வாசிகள்

கடலூர்:
 
                பாதாள சாக்கடைத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால், கடலூர் மக்கள் வெறுப்படைந்து சங்கடங்களின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
 
              கடலூரில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் மட்டும், சுமார் 70 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சிதைக்கப்படும் சாலைகளை சீரமைக்க 20 கோடிக்கு மேல் செலவாகிறது. எனவே கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டச் செலவு 100 கோடியை நெருங்கி விட்டது. சாலைகளைச் சீரமைக்க பணம் இல்லை என்று கை விரிக்கிறது நகராட்சி நிர்வாகம். அரசு 15 கோடி தந்தால் சமாளித்து விடுவோம் என்று தெரிவிக்கிறது. பாழ்பட்டுக் கிடக்கும் சாலைகள், அதனால் சிரமப்படும் மக்களைப்பற்றி அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
 
              சாலைகள் மிக மோசமாக இருக்கிறது என்று மக்கள் புகார் செய்தால், நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஓடோடி வந்து பார்வையிடுவதில் எப்போதும் குறை வைப்பது இல்லை. ஆனால் அவரது உத்தரவுகளை நகராட்சி அலுவலர்களும் ஊழியர்களும் முறையாகச் செயல்படுத்துவது இல்லை. நகராட்சித் தலைவரின் உத்தரவு ஒன்றும், அலுவலர்கள்,  ஊழியர்களின் செயல்பாடு மற்றொன்றுமாக இருப்பதாகக் கடலூர் மக்கள் வருத்தப்படுகிறார்கள்.
 
                 பாதாளச் சாக்கடைக்காக அமைக்கப்பட்ட ஆள் இறங்கு குழிகளில், மூடிகள் உடைந்து நொறுங்கியும், மூடிகளே இல்லாமலும், இருக்கும் முடிகள் சரியாக மூடப்படாமல் கிடப்பதும் இங்கே சர்வ சாதாரணமான காட்சிகள். ஆட்சியர் முதல் சாதாரண அரசு ஊழியர்கள் வரை, அமைச்சர் முதல் நகராட்சி கவுன்சிலர்கள் வரை, திட்டத்தை நிறைவேற்றும் காண்ட்ராக்ட் ஊழியர்கள் அனைவரும், கடலூர் நகர வீதிகளில்தான் செல்கிறார்கள். ஆனால் யாரும் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.   
 
                 தோண்டப்படும் பகுதியில் எந்த அறிவிப்புப் பலகைகளும் வைப்பதில்லை. நீதிபதிகள் குடியிருப்புச் சாலையில், பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட குழியில், திங்கள்கிழமை இரவு தனியார் நிறுவனப் பொறியாளர் மணி மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்தார். பலத்த காயங்களுடன் அவர் இச்சம்பவத்தில் உயிர் பிழைத்ததே ஆச்சரியம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இத்தகைய சம்பவங்களுக்கு கடலூரில் எப்போதும் குறைவில்லை.
 
                இத்தகைய சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற, சட்டம் இருந்தாலொழிய, அரசிடம் மாத ஊதியம் பெறுவோருக்கு மனச்சாட்சியும் பேசப் போவதில்லை, மனநிலையில் மாற்றமும் ஏற்படப் போவதுமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்த கடலூர் பொதுமக்கள். 
 
இதுகுறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் கூறுகையில், 
 
                   பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் இடங்களில் பிரதிபலிப்பான்கள், தடுப்புக் கட்டைகள், அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் என்ற விதி, கடலூரில் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. புதுப்பாளையம் பிரதான சாலை போன்ற நெடுஞ்சாலைகளைத் தோண்டும் போது, மாற்றுச்சாலை ஒன்றை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
 
                    எனவே பொறியாளர் மணி விபத்துக்கு உள்ளானதற்கு, பாதாள சாக்கடைத் திட்ட காண்ட்ராக்டர், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்தான் பொறுப்பு. அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும். மும்பையில் சாலை விபத்தில் ஒருவர் இறந்ததற்கு, மாநகராட்சி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. அதேபோல் கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் குற்றவியல் வழக்கு தொடர சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார் மருதவாணன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior