உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 29, 2010

பூகம்பத்தை தாங்கும் கட்டுமானம்: என்எல்சி சாதனை


பிளாக்குகளை பயன்படுத்தி சோதனை முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடம்.
 
நெய்வேலி:
 
                  பூகம்பத்தின் போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் கட்டுமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது என்எல்சி நிறுவனத்தின் ஆயத்தப் பொருள் உற்பத்திப் பிரிவு.
 
                 என்எல்சி நிறுவனத்தின் கட்டுமானத் துறையின் கீழ் செயல்படும் இத்துறை, என்எல்சி குடியிருப்பு, அலுவலகங்களுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்றவைகளை மரத்துக்கு மாற்றாக கான்கிரீட்டில் உற்பத்தி செய்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.இங்கு பல பொருள்கள் மரத்துக்கு மாற்றாக பயன்படுத்துவதுதால் கோடிக்கணக்கான மதிப்புள்ள மரங்கள் வெட்டுப்படுவது தடுக்கப்படுகிறது. 
 
                 மேலும் நிறுவனத்தின் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சாம்பலைப் பயன்படுத்தி உலர் சாம்பல் செங்கல், மின்கம்பம், குப்பைத் தொட்டி உள்ளிட்டப் பொருள்களை தயாரித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பணியையும் ஓசையின்றி செய்துவருகிறது. இந்நிலையில் என்எல்சியின் ஆயத்தப் பொருள் உற்பத்திப் பிரிவும், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து இண்டர் லாக்கிங் கட்டுமானம் என்ற புதிய முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. 
 
                  இந்த முறையில் இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பிளாக்குகளைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பொருந்திக்கொள்ளும் வகையில் கட்டுமானம் செய்யப்படுகிறது. இவற்றைப் பொருத்த சிமெண்ட் கலவை பயன்படுத்தப்படுவதில்லை.வழக்கமான கட்டுமானத்தில் செங்கற்கள் ஒன்றின் மீது ஒன்று அடுக்கி இடையில் சிமென்ட், மணல் கலவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த புதிய வகைக் கட்டுமான பிளாக்குகளின் சிறப்பான வடிவத்தால் ஒன்றுடன் ஒன்று உடனடியாக கச்சிதமாகப் பொருந்திக் கொள்கின்றன. 
 
                  இப்புதிய முறையில் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தை வேறு இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளலாம். பிளாக்குகளை சேதமின்றி பிரித்து திரும்பவும் பயன்படுத்த முடியும். வழக்கமான கட்டுமானங்களுடன் ஒப்பிடும்போது இப்புதிய முறையில் கட்டப்படும் கட்டுமானங்கள் அதிக எடையைத் தாங்கும் திறன், பூகம்பத்தால் ஏற்படும் அதிர்வைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும். மழைக் காலத்தில் கூட கட்டுமானத்தை தொடர்ந்து செய்யலாம். கொத்தனார்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் கூட கட்டுமானப் பணியைச் செய்யலாம். 
 
                  இந்த முறையிலான கட்டுமானத்தில் 19 முதல் 24 சதவீத கட்டுமானச் செலவு குறைவதுடன், 65 சதவீத கட்டுமான காலத்தையும் குறைக்க முடியும்.இப்புதிய முறையில் சோதனை அடிப்படையில நெய்வேலியில் ஒரு சிறிய கட்டடமும், ஒரு சுற்றுச்சுவரும் கட்டுப்பட்டுள்ளன என்று என்எல்சி கட்டுமானத் துறையின் பொதுமேலாளர் சங்கரன் கூறினார்.
 
                        மேலும் கட்டுமான செலவைக் குறைக்கவும், மின்வசதி மற்றம் தண்ணீர் வசதிக்கு தேவையான குழாய்களை சுவர்களினுள் பதிப்பது தொடர்பாகவும் ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன என்றார் சங்கரன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior