நெய்வேலி:
பரவனாற்றில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணியை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் மற்றும் ராமானுஜம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
பரவனாற்றில் செங்கால் ஓடை கலக்கும் இடத்தில் தடுப்புச் சுவர் கட்டுவதுடன், பராமரிப்பு வாகனங்கள் திரும்பிச் செல்வதற்கு ஏதுவாக திடல் உருவாக்க வேண்டும். மிடில் பரவனாற்றை ஆழப்படுத்தி, 12.கி.மீ. நீள இருபக்க கரைகளை அகலப்படுத்தி, உயர்த்தி தார்சாலையாக ஆடூர் அகரம் பாலம் வரை சாலை உருவாக்கி, போக்குவரத்தும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தவேண்டும், மிடில் பரவனாற்றின் தலைப்பில் மருவாய் கிராமத்தின் அருகில் உள்ள 5 கண் மதகை அப்புறப்படுத்தி, மேம்பாலம் கட்டும் பட்சத்தில் மருவாய், அரங்கமங்கலம், கல்குணம், திருவெண்ணெய்நல்லூர், பூதம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்கமுடியும்.
அருவா மூக்கு வடிகால் திட்டத்தை உருவாக்கி கடலில் வெள்ளநீர் வடிய ரெகுலேட்டர் திட்டத்தை அமைக்கவேண்டும்.உப்பனாறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றி, அவ்விடத்தில் மீண்டும் மண்மேடு உருவாகாத வகையில் திட்டமிடல் வேண்டும். வாலாஜா ஏரி தூர்ந்து போகாமல் இருக்க, ஏரியின் மேற்குப் பகுதியில் என்எல்சி நிலப்பரப்பில், சுரங்க கழிவுநீரை தேக்கி, வடிகட்டிய சுத்தமான நீரைப் பாசனத்திற்கு விடவேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 150 நிதி ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் மூலம் இப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக