கடலூர்:
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்தவர்களுக்கு நேற்று கடலோர கிராமங்களில் பலர் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உருவான சுனாமி பேரலை தமிழக கடலோர மாவட்டங்களைத் தாக்கியது.
அதில் கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், ராசப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு உள்ளிட்ட 50 கிராமங்களை தாக்கியது. இத்தாக்குதலில் 214 சிறுவர்கள் உட்பட 617 பேர் இறந்தனர். 40 பேரை காணவில்லை.உலகையே உலுக்கிய இச்சம்பவத்தின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சுனாமியில் இறந்தவர்களின் படங்கள் மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
மீனவர் பேரவை சார்பில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுனாமி நினைவு தூணில் மாநில துணைத் தலைவர் மாரியப்பன், நிர்வாகி கஜேந்திரன், சுப்புராயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிங்காரத்தோப்பில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் நடராஜன், முருகன், தேவராஜ், வெண்புறா குமார், மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.சிதம்பரம்: எம்.ஜி.ஆர். திட்டு, முடசல் ஓடை, டி.எஸ்.பேட்டை, கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் ஊர்வலமாக சென்று கடல் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் பரமதயாளன், கவுன்சிலர்கள் கற்பனை செல்வம், பாண்டியன், கலா உட்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை: அன்னங்கோயிலில் பேரூராட்சி தணை தலைவர் செழியன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் அரவிந்தன், ஜேப்பியார் பேரவை மாவட்ட தலைவர் கனகசபை, புதுப்பேட்டை கிராம நிர்வாகி மணிவண்ணன், ராஜேந்திரன், அரசு, சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சுனாமி நினைவு தினத்தையொட்டி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதன் காரணமாக மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக