உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 01, 2010

கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடலூர்:

                  கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று, சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் கோரிக்கை விடுத்தார்.

                  அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் சிலர், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனைச் சந்தித்தனர். கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல பகுதிகளில் இன்னமும் வெள்ளம் வடியாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு வெள்ள நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

                   பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதாகத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பிற்பகலில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியருடன், அய்யப்பன் எம்.எல்.ஏ. நகராட்சித் தலைவர் து.தங்கராசு, ஆணையர் த.குமார் ஆகியோரும் சென்று இருந்தனர்.கடலூர் முதுநகர், பள்ளத்தெரு, பீமாராவ் நகர், பெரியார் நகர், சுத்துக்குளம்,  திருப்பாப்புலியூர் தானம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சென்று பார்வையிட்டார். 

                நகரில் தாழ்வான பகுதிகளில் இன்னமும் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. சாக்கடை நீருடன் கலந்து உள்ள இந்த நீரால் நகரில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவ முகாம்கள் நடத்தவும், தேங்கி நிற்கும் மழை நீரை, மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றவும், நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

                 பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் இன்னமும் போடப் படாததால், அப்பகுதிகளில் மழை நீர் தேங்கியும், சாலைகள் மேலும் பழுதுபட்டும் இருப்பதால், மக்கள் நகருக்குள் சென்று வருவது பெரிதும் சிரமமாக உள்ளது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில், கடலூர் மாவட்டத்தில் 15 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

                  மாவட்டத்தில் 17,420 கிலோ அரிசி வழங்கி, மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior