சிதம்பரம் :
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட, வெள்ளப் பெருக்கால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக படகுகளில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றின் கடைமடையான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள் பருவமழை காலங்களில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக, அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படும் போதும், வீராணம் நிரம்பும் போதும் முறையான வடிகால் வசதியில்லாமல் முழுமையாக பாதிக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் முகத்து வார பகுதிகள் தூர்ந்து மண்மேடிட்டு தண்ணீர் வடியாததால் கொள்ளிடம், வெள்ளாறு கரையோர கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிற நிலை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்கிறது.
தற்போது பருவமழை துவங்கி, ஒரு வார காலம் கடுமையாக பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி, கொள்ளிடம் ஆற்றில் 40 கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றதாலும், வீராணத்தில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக, பத்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கொள்ளிடக்கரை கிராமங்களான குமராட்சி, எடையார், திருநாரையூர் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருநாரையூர், பூலாமேடு, நந்திமங்கலம், வல்லம்படுகை திட்டு ஆகிய கிராமங்களுக்கு படகுகள் விடப்பட்டுள்ளது. அதன் மூலம் நகர் பகுதிக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தண்ணீர் சூழ்ந்து நான்கு நாட்களாகியும் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக