உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 24, 2010

பெண்ணையாற்று தடுப்பணைப் பகுதியில் நிலங்களை அரித்துச் சென்ற ஆற்று வெள்ளம்


கடலூரில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இரு கரைகளிலும் உள்ள நிலங்கள் அரித்துச் செல்லப்பட்டதால், ஆற்று நடுவே தீவுபோல் காட்சி அளிக்கும்  காட்சி 

கடலூர்:

             கடலூர் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டப்படும் பகுதியில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, விளைநிலங்களை அரித்துச் சென்றுவிட்டது.  கடலூர் வழியாக ஓடி பெண்ணயாறு வங்கக் கடலில் கலக்கிறது. 

            இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு இல்லாத காலங்களில், ஆற்றின் கழிமுகப் பகுதி வழியாக, கடல் நீர் சுமார் 15 கி.மீ. வரை புகுந்து விடுகிறது. இதன் காரணமாக கடலூர், புதுவை மாநில விளை நிலங்களில் நிலத்தடி நீர், உவர் நீராக மாறிவருகிறது. இதைத் தடுக்க பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டினால், கடல் நீர் உள்புகுவது தடுக்கப்படும் என்றும், தடுப்பணையில் தேங்கும் ஆற்று நீரால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், உவர் தன்மையும் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

            இது கடலூர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை ஆகும்.  எனவே பெண்ணை ஆற்றில் கடலூர் குண்டுசாலைப் பகுதிக்கும், புதுவை மாநிலம் ஆராய்ச்சிக்குப்பம் பகுதிக்கும் இடையே, ரூ. 12 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை புதுவை மாநில பொதுப்பணித் துறை ஏற்று செயல் படுத்துகிறது. பெரும்பாலான வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தடுப்பணைக்கு மேல், மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக இரு பகுதிகளையும் இணைக்கும் பாலமும் அமைக்கப்பட உள்ளது.  இந்த நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் பெண்ணை ஆற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  

            இதனால் தடுப்பணையின் இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், புதுவை மாநிலப் பகுதியில் விளை நிலங்களையும், கடலூர் பகுதியில் சாலையோர நிலத்தையும் பெருமளவுக்கு அரித்துச் சென்றுவிட்டது. இதனால் தடுப்பணைக்கு மேல் உடனடியாக ஆள்கள் செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.  ஆற்றில் தற்போது உள்ள நீர் மட்டம் குறைந்தால்தான் தடுப்பணைக்குச் செல்ல முடியும். 

             தடுப்பணை கட்டப்பட்டு உள்ள பகுதியில், ஆற்று வெள்ளம் அதிவேகத்தில் செல்லும் நிலை உள்ளது.  எனவே தற்போதைய திட்டத்தில் தடுப்பணையைக் கட்டி முடித்தாலும், வெள்ள காலங்களில் தடுப்பணையின் இரு கோடியிலும் இருக்கும் நிலங்கள், அரித்துச் செல்லப்படாமல் பாதுகாப்புடன் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.    

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior