உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 14, 2011

கடலூர் வட்டாரத்தில் பளபள பாத்திரங்களால் குறையும் பானை பயன்பாடு


 
கடலூர்:

              பொங்கல் பண்டிகைக்கு மக்கள் மண்பானைகளைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்து வருவதாக, மண்பாண்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.  

          பொங்கல் என்றாலே புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிடுவதுதான் தமிழ் மக்களின் பழக்கமாக இருந்து வருகிறது. வேளாண் தொழிலுக்கு வந்தனம் தெரிவிக்கும், அறுவடைத் திருநாளான பொங்கல் விழா, இப்போது தமிழ் புத்தாண்டாகவும் அறிவிக்கப்பட்டு கோலாகலத்துடன் கொண்டாட தமிழக அரசு ஊக்குவித்து  வருகிறது.  பொங்கல் என்றால் அதிகாலையில் சூரியன் உதயம் ஆகும் நேரத்தில் வீடுகள் முன் பொங்கலிடும் வழக்கம்கூட தற்போது மாறி வருகிறது.  

            நகரங்களில் வீடுகளுக்கு உள்ளேயே பொங்கலிடுவோரும் அதிகமாக உள்ளனர். அதே போல் புதிய மண் பானைகளுக்குப் பதில் பலர், பளபளப்பான எவர்சில்வர் பாத்திரங்களுக்கும் மாறிவிட்டனர். இதனால் மண்பானை பொங்கல் கலாசாரம் கூட மாறிக் கொண்டு  வருகிறது.  ÷பொங்கலை முன்னிட்டாவது, மண்பானைகளை வாங்குவதன் மூலம், மண் பாண்டத் தொழிலில் ஈடுபடும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் செயலில்கூட மாற்றம் ஏற்பட்டு விட்டது.

இது குறித்து கடலூர் கோண்டூரில் மண் பானைகள் உற்பத்தி செய்யும் தொழிலாளி சுரேஷ் கூறியது:  

            கடலூர் வட்டாரத்தில் மட்டும் 500 பேர் மண் பானைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறோம். பட்டாம்பாக்கம் பகுதியில் இருந்து மண் கொண்டு வருகிறோம். மண் எடுத்து வருவதையும், செங்கல் சூளைக்கு எடுத்துச் செல்வதாக் கூறி பலர்  தடுக்கிறார்கள்.  ÷மண் பானைத் தொழிலுக்குத் தகுந்த மண் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டு விட்டது. நிலங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறிவிட்டன.  

              மீதம் இருக்கிற நிலங்களையும் செங்கல் சூளை அதிபர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இதனால் மண் கிடைப்பது இல்லை. பானைகளைச் செய்து, சுடும் இடத்திலும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், புகையைக் காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.  மண் பானைகளின் உபயோகம் பெரிதும் குறைந்து விட்டது. பொங்கலுக்கு மண் பானைகள் வாங்கும் பழக்கமும் குறைந்து வருகிறது. 

           பளபளப்பான பாத்திரங்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது. பெரிய பானைகளை பலர் வாங்குவது இல்லை. மண் பாண்டத் தொழில் செய்து, அதில் கிடைக்கும் வருவாய் குடும்பம் நடத்தப் போதுமானதாக இல்லை.  அனேகமாக எங்கள் தலைமுறையுடன் மண்பாண்டத் தொழில் முடிந்துவிடும். அடுத்த தலைமுறை அதாவது எங்கள் பிள்ளைகள் இத்தொழிலுக்கு வரமாட்டார்கள் என்றார் சுரேஷ்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior