விற்பனைக்காக அறுவடை செய்யப்பட்டுள்ள பன்னீர்கரும்புகள்.
பண்ருட்டி:
பன்னீர்கரும்பின் விலை வீழ்ச்சி அடைந்ததால் கரும்பு ஒன்று (கழி) ரூ.7 முதல் ரூ.9 வரை நிலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே பன்னீர்கரும்பு, மண்பானை, மஞ்சள் கொத்து ஆகியன மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பண்ருட்டி வட்டாரப் பகுதியில் பன்னீர்கரும்பு, மஞ்சள் செழித்து வளர்ந்து வருகிறது. அதே போல் மண்பாண்டத் தொழில் செய்பவர்களும் அதிக அளவில் உள்ளனர். இப் பகுதியில் பத்திரக்கோட்டை, சத்திரம், திருவந்திபுரம், சமுட்டிக்குப்பம், சிலம்பிநாதன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பன்னீர்கரும்பு அதிக அளவு பயிரிடப்படுகிறது. தற்போது பன்னீர்கரும்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து திரைப்படத் துறையைச் சேர்ந்த தங்கர்பச்சானின் சகோதரர் விவசாயி ப.தேவராசு கூறியது:
சட்டிப் பானை, பன்னீர்கரும்பு வைத்து பொங்கல் கொண்டாடுவது ஐதீகம். தற்போது கலாசார மாற்றத்தால் பானையை தவிர்த்து உலோக பாத்திரத்துக்கு மாறிவிட்டனர். அதேபோல் பன்னீர்கரும்பு வாங்கி சுவைப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இக்காலத்தில் பன்னீர்கரும்பு விற்பனை என்பது இருநாள்கள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் 400 ஏக்கர் பரப்பளவில் பன்னீர்கரும்பு பயிரிட்டிருந்தோம். தற்போது 200 ஏக்கர் பரப்பில்தான் பயிரிட்டுள்ளோம்.
இங்கு விளையும் கரும்பு பெங்களூர், சென்னை, ஆரணி, வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விற்பனைக்காக செல்கிறது. வியாபாரிகள் நிலத்திலேயே வந்து வாங்கி செல்வர். கடந்த ஆண்டு ரூ.12-க்கு மேல் விற்பனையான கரும்பு தற்போது ரூ.7 முதல் ரூ.9 வரைதான் விலை போகிறது. இதனால் பாடுபட்ட விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ப.தேவராசு கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக