கடலூர்:
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை, ரூ. 416 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். அரசு கள விளம்பரத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் டி.புதுப்பாளையம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியது:
குறிஞ்சிப்பாடி ஒன்றித்தில் 51 ஊராட்சிகளில் 38,811 பேர் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பதிவு செய்து உள்ளனர். இத்திட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் 2006-07-ல் ரூ. 2.37 கோடியும், 2007-08-ல் ரூ. 8 கோடியும், 2008-09 ல் ரூ. 4.81 கோடியும், 2009-10-ல் ரூ. 8.64 கோடியும் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ. 7.25 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.வறுமை ஒழிப்புத் திட்டமான இத்திட்டம் ஓர் உன்னதத் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் ஊராட்சிகள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான, சாலை அமைத்தல், குளம் தூர் வாருதல் போன்ற பணிகளைச் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பெண்களிடையே அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இத்திட்டத்தின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு ரூ. 80 கூலி பெறுகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் இதுவரை ரூ. 416 கோடி செலவிடப்பட்டு உள்ளது.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் செயல்படுவதுபோல், மற்ற திட்டங்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.
மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்த வேண்டும். குடிநீரில் ஏதேனும் குறைபாடு இருந்தால், உடனடியாகச் சரி செய்ய போதிய நிதி உள்ளது. அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கோ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். கள விளம்பர அலுவலர் டாக்டர் சிவக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் வி.தயாளன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோக்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கலையரசி, பி.ராஜவேல், முழு ஊரகச் சுகாதரத் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.தமிழ்மணி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக