உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், பிப்ரவரி 07, 2011

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யாததால் காய்கறி விலை உயர்ந்துள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

நெல்லிக்குப்பம், பிப். 6-

             கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் உழவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு நபார்டு உதவி பொதுமேலாளர் ராசகோபாலன் தலைமை தாங்கினார்.

         ராமலிங்கம், பாலகிருஷ்ணன், கிருபாகரன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் மன்ற தலைவர் வெங்கடபதி வரவேற்றார். விழாவில் உழவர் மன்றத்தை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் திறந்து வைத்தார்.

              இதன்பின் 2 விவசாயிகளுக்கு கை தெளிப்பானும், பல்வேறு விவசாயிகளுக்கு சவுக்கை, மூங்கில், குமிழ்தேக்கு, தைலம், மலைவேம்பு ஆகிய கன்றுகளையும் வழங்கினார். 
 
அப்போது கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன்பேசியது:-

            நமக்கு நாமே உணவளித்து கொள்வது இந்த தை மாதத்தில்தான். புது பானை, புது அரிசி போட்டு நமக்கு உணவளித்தும், கால் நடைகளுக்கு உணவளிப்பது இதே தை மாதம்தான். அனைத்து தானியங்களும் அறுவடை செய்யும் மாதம் தை மாதம்தான். மேலும் மகரந்த சேர்க்கை உச்சக்கட்ட காலம் இந்த தை மாதத்தில்தான். எனவேதான் தை மாதத்தில் வழி பிறக்கும் என்கிறோம். இந்த மாதத்தில் தொடங்கும் அனைத்துமே சிறப்பானதாகும். உழவர்மன்ற கூட்டங் களை இனிமேல் அதிக மகசூல் நடைபெறும் விவசாயிகளின் வயல்வெளிகளில் நடத்த வேண்டும்.

               ஈரோட்டில் 3 1/2 ஏக்கர் கத்திரி சாகுபடி செய்ததில் 450 டன் கத்திரிக்காய் அறுவடை செய்ததை பெருமையோடு பேசினார்கள். காய்கறி விலைவாசி ஏன் உயர்ந்தது என்று சிந்திக்க வேண்டும். விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யாததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் சமச்சீர் சாகுபடி முறையை பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் 3-ல் ஒரு பங்கு வருட பயிரும், 1 பங்கு நெல் போன்ற தானிய வகைகளும், 1 பங்கு தினமும் பணம் பார்க்க கூடிய காய்கறிகளும் பயிர் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட சமச்சீர் முறையை கையாண்டால் தான் வீட்டையும், நாட்டையும் முன்னேற்ற முடியும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.

               விழாவில் தமிழ்நாடு காகித நிறுவன உதவி பொது மேலாளர் டாக்டர் செழியன், புதுவை துல்லிய பண்ணை திட்ட தலைவர் பாச்சா, மேல்பட்டாம்பாக்கம் கூட்டுறவு வங்கி செயலாளர் ஜோதிலிங்கம், உழவர்மன்ற தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், ரவீந்திரன், வேணுகோபால், வரதன், வேல்முருகன், விஜயகுமார், ராமலிங்கம், குஞ்சிதபாதம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் மங்களம், துணை தாசில்தார் நாசீர் இக்பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உழவர்மன்ற துணைத்தலைவர் சேகர் நன்றி கூறினார்.
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior