நெல்லிக்குப்பம் :
நெல் விலை குறைந்துள்ளதாலும், புதிய தொழில் நுட்பங்கள் காரணமாக ஆட்கள் தேவை குறைந்துள்ளதால் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தில் நான்கு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்கு சப்ளை செய்ய ஆயிரக்கணக்கான விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வந்தனர். கரும்பு பயிரிட ஆட்கள் அதிகம் தேவை. ஆனால் விவசாய தொழிலுக்கு ஆட்கள் வருவது குறைந்ததால் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை தவிர்த்தனர். பல விவசாயிகள் நெல் பயிரிடத் துவங்கினர். நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்கள் பயன்படுத்தத் துவங்கியதால் ஆட்கள் தேவை குறைந்தது.
இன்னும் சில விவசாயிகள் ஆட்கள் பிரச்னை காரணமாக நல்ல மகசூல் கிடைக்கும் நிலங்களில் கூட சவுக்கு பயிரிடத் துவங்கியதால் கடந்த மூன்றாண்டுகளாக மாவட்டத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு வெகுவாக குறைந்தது. இரண்டு ஆண்டுகளாக நெல்லுக்கு நல்ல விலை கிடைத்ததால் கரும்பு நடவு குறைந்தது. இதனால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யத் துவங்கினர்.
மேலும், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கரும்பு பயிரிட்டால், ஆட்கள் தேவை குறைவதோடு, குறைந்த பரப்பளவில் அதிக கரும்பு பயிரிட முடியும். அதன் மூலம் அதிகம் லாபம் ஈட்ட முடியும் என்பதை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகள் மத்தியில் பல்வேறு முகாம்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நெல் விலை திடீரென குறைந்துள்ளது. அதேபோன்று ஒன்னரை லட்சம் ரூபாய்க்கு விலைபோன ஒரு ஏக்கர் சவுக்கை மரம் தற்போது 80 ஆயிரம் ரூபாயாக குறைந்தது.
இதனால் விவசாயிகள் பலர் தற்போது கரும்பு பயிரிட ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். கரும்பு பயிரிட வங்கியில் சுலபமாக கடன் கிடைப்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதன்படி நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4,500 ஏக்கர் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று மற்ற மூன்று சர்க்கரை ஆலை பகுதிகளிலும் கரும்பு பயிரிடுவது அதிகரித்துள்ளது. இதனால் வரும் நான்கு ஆண்டிற்கு சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான கரும்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ஆலை நிர்வாகம் முறைப்படுத்துமா? :
எளிதாக வங்கிக் கடன் கிடைப்பதாலும், புதிய தொழில் நுட்பங்களால் ஆட்கள் தேவை குறைந்துள்ளதாலும், நிலையான வருவாய் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் போட்டி போட்டுக் கொண்டு கரும்பு பயிரிடுகின்றனர். கரும்பை நடவு செய்த 12 மாதத்தில் வெட்டி ஆலைக்கு அனுப்பினால் மட்டுமே லாபம் கிடைக்கும்.
12 மாதத்திற்கு மேலாகி வெட்டினால், கரும்பின் பிழிதிறன் குறைவதோடு, லாபமும் குறையும். அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளதால், 12 மாதத்தில் ஆலை நிர்வாகம் "கட்டிங் ஆர்டர்' (அறுவடை செய்ய) வழங்குமா என விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். இதனைத் தவிர்த்திட, ஒவ்வொரு மாதத்திற்கும் ஆலைக்குத் தேவையான அளவு பரப்பளவில் மட்டும் கரும்பு நடவு செய்ய அனுமதித்தால் வரும் ஆண்டு அறுவடை உத்தரவு வழங்குவதில் பிரச்னை இருக்காது.
ஆனால், ஆலை நிர்வாகம் இந்த விஷயதத்தில் கவனம் செலுத்தாமல், அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்தால் போதும் என செயல்படுவதால் "கட்டிங் ஆர்டர்' கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக