உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம்

கடலூர் : 

             தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியது: 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்ட சபை தொகுதிகளில் 8,36,633 ஆண் வாக்காளர்களும் 8, 08,501 பெண் வாக்காளர்களும் ஆக 16,45,134 வாக்காளர்கள் உள்ளனர். 1,165 ஓட்டுச்சாவடிகள் பதட்டம், மிகவும் பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகள் என கண்டறியப்பட்டு 1,900 மத்திய ரிசர்வ் படை காவலர்கள் தேவை என ஆணையத்திடம் கோரப்பட்டுள்ளது.

                கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இன்று (நேற்று) முதல் செயல்படத் துவங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை தெரிவிக்க 04142-220029, 230651 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் 400 முதல் 450 ஓட்டுச்சாவடிகளில் முதன் முதலாக "வெப் கேமரா' பொருத்தி ஓட்டுப் பதிவினை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

             பதட்டம் நிறைந்த, மிகவும் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்து தேர்தலை நடத்துவதற்கு 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர், காவல்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

               இது தொடர்பாக இன்று (நேற்று) மாலை தேர்தல் அலுவலர் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களுக்கான கூட்டம் நடக்கிறது. நாளை (இன்று) காலை 10 மணிக்கு போலீஸ் திருமண மண்டபத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கான கூட்டம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு அனைத்து கட்சிக் கூட்டம் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் படி அரசியல் கட்சிகள் காவல் துறை நிர்ணயித்துள்ள இடங்களில் மட்டுமே காவல்துறை அனுமதி பெற்று ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். 

                பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரத்தை நகரப் பகுதிகளில் இரவு 10 மணிக்குள்ளும், கிராமப்புறங்களில் இரவு 11 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். பேட்டியின் போது எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கூடுதல் கலெக்டர் வீரராகவராவ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior