தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி 3,484 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் இத்தேர்வை சுமார் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினர்.
இத்தேர்வு எழுதியோரிடம் சிலர், சாதகமான முடிவை பெற்று தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து வருவதாக நிறைய புகார்கள் வந்தன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு சீட்டுக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது போல் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி. எச்சரித்துள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத் தாள்கள் தேர்வாணையத்தால் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விடைத் தாள்கள் அனைத்தும் கணினி மூலம் மிகுந்த பாதுகாப்பிற்கிடையே கவனத்துடன் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுக்கான முடிவுகள் முற்றிலுமாக விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும் இடஒதுக்கீடு சுழற்சி அடிப்படையிலும்தான் வெளியிடப்படும்.
விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில் யாரும் குறுக்கிடவோ தவறு செய்யவோ சாத்தியமில்லை. பொதுமக்களிடம் அல்லது விண்ணப்பதாரர்களிடம் தேர்வின் முடிவினை சாதகமாக பெற்றுத் தர முடியும் என்று தவறான செய்தியை யாரேனும் பரப்பினால் அது உண்மைக்கு புறம்பானது. அதனை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக