உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 22, 2011

வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் செலவினங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்

கடலூர்:
 
 கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
              ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளுக்கு முன்னதாக அந்தந்த தொகுதியில் உள்ள பிரதானமான ஒரு வங்கியில் தனது பெயரிலோ அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் முகவர் பெயரினையும் சேர்த்து கூட்டாகவோ வங்கி கணக்கை தொடங்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் போது எழுத்து மூலமாக அந்த வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். வேட்பாளரின் தேர்தல் செலவினம் யாவும் அந்த வங்கி கணக்கின் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

                 வேறு எந்தவொரு வங்கி கணக்கின் மூலமும் வேட்பாளரின் தேர்தல் செலவினம் மேற்கொள்ளப்படக்கூடாது.செலவுகளுக்கு அளிக்கப்படும் தொகைகளை காசோலை மூலமாகவே பெற்று வழங்க வேண்டும். வேட்பாளர் தனது தேர்தல் செலவினங்களை தினசரி கணக்கு பதிவேட்டில் உள்ள 3 வண்ணப்பதி வேடுகளில் பதிய வேண்டும். வெள்ளை தாளில் தினசரி செலவின விவரங்களையும், பிங்க் கலர் தாளில் ரொக்கப்பதிவேடுகளையும், மஞ்சள் கலர் தாளில் வங்கி கணக்கு பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் 3 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் அலுவலரால் நிர்ணயிக்கப்படும் தேதியில் கணக்கு சரிபார்க்கும் குழு விடம் கணக்கு பதிவேட்டுடன் சரிபார்த்தலுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

         இக்கணக்கை வேட்பாளரோ அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட ஏஜெண்டோ ஒப்பமிட வேண்டும். குறைந்தபட்சம் 3 முறை தேர்தல் செலவின பார்வையாளரால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் வேட்பாளர்கள் கண்டிப்பாக கணக்கினை ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் வேட்பாளர் மீது தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அனைத்து கணக்கு பதிவேடுகளையும், அதற்கான அசல் செலவின சீட்டுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் வங்கிக்கணக்கின் நகலை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரின் ஒப்பத்துடனும், செலவின கணக்குடனும் இணைத்து வேட்பாளரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

                    தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காதது, உண்மையான கணக்கினை சமர்ப்பிக்காதது, சரியான கணக்குகளை சமர்ப்பிக்காதது போன்ற 3 காரணங்களுக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 10(அ)-ன் படி சம்பந்தப்பட்ட வேட்பாளர் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து உத்தரவிடப்படும்.  இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior