உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 22, 2011

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சாதனைகள்


அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  குறிஞ்சிப்பாடி தொகுதி 
 
 
நெய்வேலி : 
 
               கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு, இத் தொகுதியில் அவர் மேற்கொண்டுள்ள மேம்பாட்டுப் பணிகளால் பெரும்பாலான ஆதரவு காணப்படுகிறது.  கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். இவர் தன்னை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் என்.ராமலிங்கத்தை விட 1,915 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இவர், இத்தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார்.
 

 சாதனைகள்:  
 
              தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில்தான் குறிஞ்சிப்பாடி தொகுதியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். குறிஞ்சிப்பாடியை தனி தாலுகாவாக உருவாக்கியது, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தியது, வடலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை துவக்கியது.  
 
                தொகுதி மறுசீரமைப்பின் மூலம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இணைந்துள்ள கடலூர் ஒன்றிய கிராமப் பகுதியான அரிசிபெரியாங்குப்பம் எம்.புதூரில் ரூ.100 கோடி மதிப்பில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது. தொகுதிக்குள்பட்ட நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியது, பகுதிநேர நியாய விலைக்கடைகள் முழுநேர நியாயவிலைக் கடைகளாக மாற்றியது. தொகுதிக்குள்பட்ட பல இடங்களில் சிமென்ட் சாலைகள், வடலூர் நான்கு முனை சந்திப்பை அகலப்படுத்தியது, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தை அழகுப்படுத்துவதற்கான பணிகளை தொடங்கியது, மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது என பல சாதனைகள் செய்துள்ளதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.  
 
கண்டு கொள்ளாதது: 
 
            ஒவ்வொரு முறையும் பருவமழை பெய்யும்போது, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விளைநிலங்கள் பாழாவதை தடுக்க நிரந்தர திட்டம் எதுவும் மேற்கொள்ளாதது, சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதை தடுக்க எவ்வித திட்டமும் ஏற்படுத்தாது, வடலூர் வாசிகளுக்காக ஒதுக்கப்பட்ட மயானம், மாமிசக் கழிவுகளின் கூடாரமாக மாறிவருவது உள்ளிட்டவைகளை இவர் கண்டு கொள்ளவில்லை என தொகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.  
 
பலம், பலவீனம்:  
 
              கட்சியினர் மட்டுமின்றி தனக்கு அறிமுகமானவர் யாராக இருந்தாலும் அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் அவரது வீடுகளில் நடக்கும் சிறு நிகழ்ச்சிகளுக்கு கூட தவறாமல் கலந்துகொள்வது, தன் கட்சியினரைக் காட்டிலும் கூட்டணிக் கட்சியினரை அரவணைத்துச் செல்வது போன்றவை இவருக்கு பலமாக உள்ளது. அதேநேரத்தில் தனது கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்களை எதிரியாக பார்ப்பது, சில நேரங்களில் விழா நடைபெறும் மேடையிலேயே கட்சியினரை கடிந்து கொள்வது, இவரது பெயரில் கட்சியின் நிர்வாகிகள் செய்த கட்டப்பஞ்சாயத்தை இவர் கண்டுகொள்ளாமல் இருந்தது போன்றவை இவருக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.  
 
 மீண்டும் போட்டி: 
 
                 இந்தமுறை மீண்டும் குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுவதால் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் இவர் மேற்கொண்ட பணிகள் முழுமையாக பயனாளிகளை சென்றடைந்ததாக நம்பி தைரியமாக பொதுஜனம் முன்பாக கைக் கூப்பி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior