கடலூர்:
சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மக்களில் வாக்களிக்கத் தயக்கம் காட்டுவோர் எண்ணிக்கை, அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் கடலூர் மக்களின் அடிப்படைத் தேவைகள் பெரும்பாலானவை புறக்கணிக்கப்பட்டு உள்ளன. 3 ஆண்டுகள் முடிவடைந்தும் நிறைவடையாத ரூ. 80 கோடி பாதாளச் சாக்கடைத் திட்டம்.÷இத்திட்டம் முடிவடையா விட்டாலும், திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் தவறிவிழுந்து பலர் இறந்து இருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.
தோண்டப்பட்ட சாலைகள் பலவும் இப்போதும் மக்கள் நடமாட்டத்துக்கு உகந்ததாக இல்லை. இச்சாலைகளில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவோர் பலரும், உடல் உபாதைகளுக்கு நாளும் இலக்காகிக் கொண்டு இருக்கிறார்கள். நெடுஞ்சாலைகள் பலவும், 2 ஆண்டுகளுக்கு மேலாக சிதைந்து கிடக்கின்றன. அவற்றை புதுப்பிக்க இனிமேல்தான் டெண்டரே விட வேண்டும் என்கிறார்கள். அவைகள் தேர்தலுக்குள் சீராகும் வாய்ப்பே இல்லை.
ரூ. 26 கோடியில் போடப்பட்டு வரும் நகராட்சி சாலைகளும், தேர்தலுக்கு முன் முடிவடைய வாய்ப்பு இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அதிகாரிகளின் கவனம் முழுவதும், தேர்தல் ஏற்பாடுகளின் பக்கம் திரும்பி விட்டது.÷இதனால் சாலைப் பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளால் இயலாமல் போய்விட்டது. பிப்ரவரி மாதத்துக்குள் சாலைப் பணிகள் முடிந்து விடும் என்ற உறுதிமொழியெல்லாம், இப்போது தகர்ந்துபோய், வாக்களிக்கும் நாளுக்கு முன்னர்கூட, சாலைப் பணிகள் முடிவடையப் போவதில்லை என்பதற்கு, அப்பணிகளின் இன்றைய நிலையே சாட்சி.
பல வேலைகள் தொடங்கப்படாமலும், தொடங்கிய வேலைகளிலும், சாலைகள் தோண்டப்பட்டும், கற்கள், சரளைக் கற்கள் கொட்டப்பட்டும் அரை குறையாக, போக்கு வரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. இச்சாலைகளில் நடந்து செல்வதும்கூட பாதுகாப்பாக இல்லை என்கிறார்கள் பொதுமக்கள். எனவே இச்சாலைகளின் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து, எத்தனை பேர் வாக்குச் சாவடிகளுக்கு வருவார்கள். அடிப்படை வசதி செய்யாததால் வாக்களிக்க மாட்டோம் என்று கடலூரில் பலர் அறிவிக்கத் தொடங்கி விட்டனர். நகரின் தற்போதைய நிலை ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, ஏன் வாக்களிக்க வேண்டும்? யாருக்கும் வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்ல விருப்பம் இல்லை என்று கூறும் மக்கள் அதிகம்.
அடித்தட்டு மக்கள் எப்போதும்போல் வாக்குச் சாவடிகளுக்கு வரக்கூடும். அவர்களிலும், கடலூர் நகரைப் பொறுத்தவரை இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி போன்ற பிரச்னைகள், வாக்களிக்கத் தூண்டுவதாக இல்லை. வாக்களிப்பதில் சோம்பேரித்தனமாக நடந்து கொள்ளும் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களும், நகரின் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து, நம்மால் இச்சாலைகளில் எல்லாம் நடந்து சென்று வாக்களிக்க முடியாது என்ற கருதும் பட்சத்தில், அப்பிரிவு மக்களின் வாக்களிப்பு சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கூறுகையில்,
"வளர்ச்சிப் பணிகளை தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று விதிகளை உருவாக்க வேண்டும்.÷டெண்டர் விட்டும் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டம், முடிவடையாத பாதாளச் சாக்கடை திட்டத்தால், நகரின் அலங்கோலமான நிலை காரணமாக, மேல்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாக்களிப்பு ஆர்வம், இத்தேர்தலில் குறைய வாய்ப்பு உள்ளது' என்றார்.
அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டடைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறுகையில்,
"நகரச் சாலைகளின் நிலை, மக்களை வாக்களிக்கத் தூண்டுவதாக இல்லை.÷நடந்தோ, வாகனங்களிலோ வாக்குச் சாவடிகளுக்கு செல்வதே இயலாத நிலையில், பலர் வாக்களிக்க முன்வரத் தயக்கம் காட்டுவார்கள்' என்றார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறுகையில்,
"சாலைப் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கான கால அவகாசம் 6 மாதம் என்றாலும், பணிகளை விரைந்து முடிக்கச் சொல்லி இருக்கிறோம். சாலைப் பணிகள் பல நிறைவடையும் தருவாயில் உள்ளன. மார்ச் 31-ம் தேதிக்குள் 50 சதவீதம் பணிகள் முடிக்கப்படும்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக