உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், மார்ச் 08, 2011

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி : சுகாதார அமைச்சரின் சாதனைகள்

கடலூர் :


                வன்னியர் வாக்கு வங்கி நிறைந்த பகுதிகளில் கடலூர் மாவட்டமும் ஒன்று. வன்னியர் சங்கம் தோன்றிய காலத்தில் தி.மு.க.-வின் செல்வாக்கு மாவட்டத்தில் குறைந்தபோது, ‘நானும் ஒரு வன்னியர்தான்’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, சரிந்த செல்வாக்கை சரிக்கட்டியதில் பெரும்பங்கு வகித்தவர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. தி.மு.க.வில் சாதாரண உறுப்பினராக இருந்த எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அதன்பிறகுதான் சேர்மன், எம்.எல்.ஏ. என பதவிகள் பெற்றதோடு, கட்சியில் தனது செல்வாக்கையும் உயர்த்திக்கொண்டார். கலைஞரின் தளகர்த்தர்களில் ஒருவராகவும் உயர்ந்தார்

            இந்த செல்வாக்கை பயன்படுத்தி 90-களிலதனது மகனை சிதம்பரம் தொகுதியில் நிறுத்தினார் எம்.ஆர்.கே. ஆனால், முதல் பரீட்சையில் மகன் தோல்வியடைய.... அடுத்து வந்த தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக ஆனார் எம்.ஆர்.கே.வின் மகன். பிறகு, அமைச்சரும் ஆகிவிட்டார். அவர்தான் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.


சுகாதார அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தொகுதி ஆரோக்கியமாக இருக்கிறதா?

குறிஞ்சிப்பாடியின்  டீ கடை நடத்தும் ஏழுமலை.
            
             “சாலை வசதியே இல்லாத குறிஞ்சிப்பாடி தொகுதியில இன்றைக்கு அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதியோட பஸ் போக்குவரத்தும் இருக்கு. இதுக்கு முழு காரணம் எங்க அமைச்சர்தான். மத்திய அரசின் கல்விக் கடன் திட்டம் எங்க தொகுதியில கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்டவங்களுக்கு கிடைச்சிருக்கு. பட்டா, கலர் டி.வி. என அரசின் திட்டங்களை முழுமையாக எங்களுக்கு கிடைக்க வழி செஞ் சிருக்கார் எங்க அமைச்சர்...” என்று அமைச்சரை ஆசை தீர பாராட்டினார். 
  குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விதவைப் பெண்ணான வள்ளி கூறியது  
             
                “ஊரெல்லாம்  பன்றிக் காய்ச்சல் வந்தபோது, அதில் என் கணவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அரசு சரியான மருந்தையும், சிகிச்சை-யையும் அளித்திருந்தால், என் கணவர் பிழைத்-திருப்பார். என் கணவர் உயிரிழந்ததற்கு எங்கள் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்கவில்லை. அமைச்சரிடம் மனு கொடுத்து போராடியும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை...” என்றார் சோகமாக. 
சோளக்குப்பத்தைச் சேர்ந்த வள்ளாரி என்ற வயதான பெண் கூறியது
               “கடந்த 6 ஆண்டு-களாக முதியோர் பணம் பெறுவதற்கு நானும் நடையாக நடந்தேன். இதை மனுவாகவும் எழுதி அனுப்பினேன். இதுவரை எனக்கு அந்தப் பணம் கிடைக்கவே இல்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு சென்றாலும், எனக்கு வேலை கொடுப்பதில்லை. கேட்டால் வயதாகிவிட்டது என்று சொல்கிறார்கள். நான் எப்படி ஜீவனம் நடத்துவது? எனக்கு இருப்பது ஒரே மகன்... அவனும் திருமணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்டான்...” என்றார் பரிதாபமாக.

சேரக்குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் பேசியது :
            “நிறைய நலத்-திட்டங்களையும் செஞ்சிருக்கார். இருபது வருஷமா இலவச மனைப் பட்டாவுக்காக போராடினோம். அமைச்சர்தான் வாங்கிக் கொடுத்தாரு. அதுமட்டுமல்ல, எங்க கிராமத்திலதான் முதல்முதல்ல வீடு கட்டும் திட்டத்தையும் தொடங்கி வச்சாரு. அது எங்களுக்கு பெருமை இல்லையா..? ஏதாவது விசேஷம் என்றால் பத்திரிகை கொடுத்தால் போதும், அவர் வரவில்லை என்றஸ்£ல், அவரை சார்ந்தவர்களில் யாராவது ஒருவர் வந்து செல்வார்கள். அதுமட்டுமில்ல... கிராமத்தில் சாவு என்றால், யாராக இருந்தாலும் உடனடியாக 500 ரூபாய் அல்லது 1000 ரூபாய் கொடுத்தனுப்-புவார்...” என்றார்.

மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த காசிநாதன் பேசியது :

                “டி.வி. கொடுத்-தாலும், பென்ஷன் கொடுத்தாலும், வீடு கட்ட மானியம் கொடுத்தாலும் தி.மு.க.காரர்களுக்கு மட்டும்தான். அவர்களை தேடிப்-பிடித்துதான் எல்லா உதவிகளும் செய்கிறார்கள். இதில் பொதுமக்களோ, மாற்றுக் கட்சியினரோ பயன்பெற முடியாத நிலைதான் இருக்கு. ஒரு மாணவனை அரசு விடுதியில் சேர்க்க வேண்டும் என்றால் கூட கட்சிக்காரரின் சிபாரிசுக் கடிதம் கேட்கிறார்கள். அமைச்சரிடம் கேட்டால், உன் ஊரில் உள்ள கட்சிக்-காரனை அழைத்து வா என்கிறார். நானும் இந்தத் தொகுதியை சார்ந்தவன்தானே, ஓட்டு போட மட்டும் நாங்க வேண்டும். மற்ற பயன்பாடுகளுக்கு எல்லாம் கட்சிக்காரன் மட்டும்தானா?’’ என்றார் கொதிப்போடு.


வடலூரைச் சேர்ந்த குப்பம்மாள்  பேசியது : 
               “நீண்ட நாளாக நான் சளி கோளாறால் அவதிப்பட்டு வந்தேன். எம்.எல்.ஏ-.வை சந்தித்து விவரத்தைச் சொன்னேன். அவர் உடனடியாக என்னை மருத்துவ-மனையில் அனுமதிக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். அதன்பேரில் நான் சேர்ந்து சிகிச்சை எடுத்தேன். மருந்து மற்றும் மாத்திரை செலவிற்காக எனக்கு பணம் ரூ.5000 கொடுத்து உதவினார்கள். இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்றால், அதற்கு அமைச்சர்தான் காரணம்...’’ என்றார் கண்ணீர் கலந்த நன்றி விசுவாசத்தோடு.


வடலூரைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் பேசியது
              “வள்ளலார் ஜோதியான மேட்டுக்குப்பம் இன்றுவரை புனரமைக்கப்படாமல் உள்ளது. அதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து, அதை மேம்படுத்த வேண்டும். சைவத்தின் வலிமையை உணர்த்திய வள்ளலார் மடம் இன்றுவரை சரியாக பராமரிக்கப்படாமலும், அதற்காக நிதி ஒதுக்கப்படாமலும் உள்ளது. இந்து அறநிலையத் துறை சார்பில் கூடுதல் நிதி பெற்று நிறைய உணவு மண்டபங்கள், தியான மண்டபங்கள், வெளியூர் பக்தர்கள் தங்கும் இட வசதி போன்றவைகளை ஏற்படுத்தித் தரவேண்டும்’’ என்று கோரிக்கைகளை வைத்தார்.

கடலூர் மாவட்ட நுகர்வோர் அமைப்பு தலைவர் நிஜாமுதீன்  பேசியது  
             
           “அமைச்சர் என்பவர் ஒரு தொகுதிக்கு மட்டும் உள்ளவர் அல்ல. மாவட்டம் முழுக்கவும், மாநிலம் முழுக்கவும் செயல்படக் கூடியவர். நகர்ப் பகுதியில் மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் அமைக்க வாய்ப்பும், இடமும் உள்ளது. ஆனால், அமைச்சரோ தனது தொகுதிக்குட்பட்ட கேப்பர் மலைக்கு இதை எடுத்துச் சென்றுவிட்டார். தொகுதி மறு சீரமைப்பிற்கு பிறகு கடலூர் நகர் பகுதியில் பாதிக்கு மேல் குறிஞ்சிப்பாடி தொகுதியில் சேர்கின்றன. ஆனால், இன்றுவரை ரயில்வே சுரங்கப் பாதை திட்டத்தை இந்த அமைச்சர் கொண்டு வரவில்லை. சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் இவர், மாவட்ட மருத்துவமனையை இதுவரை தரம் உயர்த்தவில்லை. மீனவர்கள் பிரச்னை, சுனாமி திட்டங்கள், பாலம் கட்டுதல், நலத்திட்டங்கள், கடலூருக்கு பை-பாஸ் சாலை அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் இன்னும் கிடப்பிலேயே கிடக்கின்றன. உடனடியாக இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு ஆயிரத்து 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த என்.ராமலிங்கத்திடம் பேசியது 
             “எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கட்சியின் மீதும், மக்களின் மீதும் மிகவும் அக்கறைக் கொண்டவர். அதனாலேயே கடலூரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை என பெயர் வைக்கப்பட்டது. ஆனால், அவரது மகனான பன்னீர்செல்வமோ தொகுதி மக்கள் மீது எந்த அக்கறையும் கொள்வதில்லை. தனது அப்பா காலத்து தி.மு.க.வினரைக் கூட இவர் மதிப்பதில்லை என தி.மு.க.வினரே புலம்புகிறார்கள். இந்தத் தொகுதியில் நெசவுத் தொழிலாளர்கள் அதிகம். ஆனால், அவர்கள் வாழ்க்கை மேம்பட எந்த நடவடிக்கையும் அமைச்சர் மேற்-கொள்ளவில்லை. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. பேரூராட்சி அலுவலகம் இன்று வரை சரியாக செயல்படுவதில்லை. 
               அதையும் அவர் கண்டு-கொள்வதில்லை. குறிஞ்சிப்பாடியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்துமே இங்கு உள்ள பெருமாள் ஏரியை நம்பித்தான் உள்ளது. 9 கி.மீ. நீளமும், 7 கி.மீ. அகலமும் கொண்ட மிகப்பெரிய இந்த ஏரி இப்போது மண் மூடிக் கிடக்கிறது.

இதனால் பல நூறு ஏக்கர் பரப்பிலான விவசாயமும் மண்மூடிப் போகும் அபாயம் இருக்கிறது. இந்த ஏரியைத் தூர்வாரி விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கு அமைச்சர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அப்படி செய்தால் இரண்டு போகம் விவசாயம் செய்யலாம். இவரால் முடியவில்லை என்றால் நெய்வேலி அனல்மின் நிறுவனத்திடம் சொல்லி இதை செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை” என புகார்களாக அடுக்கினார்.

இதுபற்றியெல்லாம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பினர் கூறுவது

              “சட்டமன்றத்தில் மருத்துவக்கல்லூரி அமையும் என அறிவித்த உடனேயே மாவட்ட மக்களுக்காக உடனடியாக இடம் ஆர்ஜிதம் செய்து, கடந்த 13&-ம் தேதி துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளனர். கடலூரைச் சுற்றியுள்ள கிராமங்களையொட்டி சுமார் 68 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி, முதியோர் பென்ஷன் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது அமைய இருக்கக்கூடிய அரசு மருத்துவக்கல்லூரியையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் மிக பிரமாண்டமாக கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதியை கண்காணிக்கவும் உதவிகளை செய்து கொடுக்கவும் மூன்று உதவியாளர்களை நியமித்திருக்கிறார் அமைச்சர். அவர்கள் கொடுக்கும் தகவலோடு தானும் பல பகுதிகளுக்கு சென்று மக்களின் நிறைகுறைகளை அறிந்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்’’ என்றனர்.

                எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீது ஆங்காங்கே விமர்சனங்கள், குறைபாடுகள் இருந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை தொகுதிக்குள் பெருமளவு அமல்படுத்தியிருப்பதால், தனது தொகுதியில் ஆரோக்கியமாகவே இருக்கிறார் சுகாதார அமைச்சர்.


தவலுக்கு நன்றி : 

          தமிழக அரசியல் 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior