உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 06, 2011

விருத்தாசலம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி: விவசாயிகள் முற்றுகை


விருத்தாசலம்: 

           ஆலிச்சிக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை மோசடி நடந்ததை கண்டித்து, விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

               கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடியில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. நிலைய பொறுப்பு அலுவலராக பட்டியல் எழுத்தர் (தற்காலிக ஊழியர்) முத்துகுமார் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜன., 19ம் தேதி முதல் இந்நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 3ம் தேதி விவசாயிகளிடம் நெல் மூட்டை 41 கிலோ என, கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு எடையில் சந்தேகம் ஏற்பட்டதால், மாலையில் தனியார் எடை மிஷினை எடுத்து வந்து, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை எடை போட்டு பார்த்தனர். அப்போது, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் சராசரியாக 49 முதல் 52 கிலோ வரை எடை கூடுதலாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மூட்டைக்கு எட்டு கிலோ முதல் 10 கிலோ வரை மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்த விவசாயிகள், பொறுப்பு அலுவலரை முற்றுகையிட்டு மோசடி குறித்து கேட்டனர். எடை மோசடியை ஒப்புக் கொண்ட பொறுப்பு அலுவலர் முத்துகுமார், மூட்டைக்கு 4 கிலோ வீதம் விவசாயிகளுக்கு பணத்தை மறுநாள்(4ம் தேதி) தருவதாக ஒப்புக் கொண்டார்.

                   ஆனால், 4ம் தேதி முத்துகுமார் கொள்முதல் நிலையத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நிலையத்தை முற்றுகையிட்டனர். சிதம்பரம் நெல் கொள்முதல் அலுவலர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள், கடந்த ஜன., 19ம் தேதியில் இருந்து எடை மோசடி நடந்திருப்பதால், அனைத்து மூட்டைக்கும் பணம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 3ம் தேதி கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைக்கு மட்டும் தான் பணம் தர முடியும் என கூறிய கொள்முதல் அலுவலர், கண்காணிப்பாளருக்கு தகவல் கூறிவிட்டு சென்று விட்டார். தொடர்ந்து, சிதம்பரம் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது, எடை மோசடி நடந்திருப்பது உண்மை என கண்டறியப்பட்டு 5ம் தேதி(நேற்று) காலை 10 மணிக்கு பட்டியல் எழுத்தர், சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் நேரில் வந்து பேசுவதாகக் கூறி விவசாயிகளிடம் எழுதி கொடுத்து விட்டுச் சென்றார். ஆனால், நேற்று காலை 12 மணி வரை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் வராததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து விவசாய விடுதலை முன்னணி வட்டார செயலர் ஜெயகாந்த் சிங் கூறுகையில்,

              "கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் இதுவரை 16 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மூட்டைக்கு 40 ரூபாய் என பார்த்தால் கூட இதுவரை 6 லட்சம் ரூபாய்க்கும் மேல் விவசாயிகளிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்து, தவறு செய்தவர்களை தண்டித்து விவசாயிகளுக்கான பணத்தை தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior