உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 25, 2011

தொலைநிலைக் கல்வியின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும்: வா.செ. குழந்தைசாமி

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக 5-வது பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பட்டம் வழங்குகிறார் பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா

               
                தொலைநிலைக் கல்வியின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி கூறினார்.
 
         தனியார் துறையிலும், பொதுத் துறையிலும் சில தகுதியற்ற, நேர்மையற்ற நிர்வாகத்தினரின் செயல்பாடுதான் இதற்கு காரணம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக 5-வது பட்டமளிப்பு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 
விழாவில் வா.செ. குழந்தைசாமி பேசியது:- 
               ""இந்தியாவில் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற சொல் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தவறான வழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிர்வாக அலுவலர்களாலும், நீதிமன்றத்தால் பணியமர்த்தம் செய்பவர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்படும், குறைகாணப்படும் நிறுவனமாக திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இருக்கிறது. ஆனால், மேலை நாடுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தரத்திலும், தகுதியிலும் மரபு வழிப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. உயர் கல்வியில், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேவை முறையாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 
                ஒருவர் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பெற்ற கல்வி அறிவை வைத்துக்கொண்டு தனது வாழ்நாள் முழுவதும் திறனுடன் செயல்பட முடியாது. ஒவ்வொருவரும் தமது கல்வியறிவை உயர்த்தவேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் அல்லது விரிவுபடுத்த வேண்டும். எனவே, கல்வி 6 முதல் 23 வயது வரை பெறக்கூடிய ஒன்றாக இல்லாமல், வாழ்நாள் முழுவதும் பெற வேண்டிய பொருளாகிவிட்டது. அத்தகைய கல்வியை, ஒருவர் தொடர்ந்து வகுப்பறைக்குச் சென்று முழு நேர மாணவனாகப் பெற முடியாது. அலுவலகத்தில், தொழில் சாலையில், வீட்டில் அவரவர் வசதிக்கேற்ப கற்கும் வாய்ப்பு உருவாக வேண்டும். 
                 இதுபோல் 1990-ல் தாய்லாந்து ஜாம்டியன் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் அனைவருக்கும் கல்வி என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மரபு வழிக் கல்வியால் மட்டும் பூர்த்தி செய்துவிட முடியாது. இதற்கு தொலைதூரக் கல்வி முறை மிக அவசியம். எனவே, பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், கல்வியாளர்களும், நீதிமன்றங்களும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை எளிதான ஒன்றாக எடைபோட்டு விடக் கூடாது. தொலைநிலைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் நாம், தொலைநிலைக் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், தரத்தை பாதுகாக்கவும் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் அவர் கூறினார். 
           பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் 27 ஆயிரத்து 261 மாணவ, மாணவிகளில், 3 ஆயிரம் பேருக்கு விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.
மாணவிக்கு பதக்கம்
 
                பேச்சு-கேட்பியல் பட்டப்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஜி.சரண்யாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையுடன் இணைந்த பேச்சு-கேட்பியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் (பி.ஏ.எஸ்.எல்.பி.) முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஆளுநர் பர்னாலா அவருக்கு தங்கப் பதக்கம் அணிவித்தார். 
               பல்வேறு படிப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற 167 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை காது-மூக்கு-தொண்டை பேச்சு-கேட்பியல் மையத்தில் நாட்டிலேயே பிரத்யேகமாக நடத்தப்பட்டு வரும் முதுநிலை கேட்பியல் மறுவாழ்வு பட்டயப் படிப்பை( "பி.ஜி. டிப்ளமோ இன் ஆடிட்டரி ஹாபிட்டேஷன்') முடித்த நான்கு மாணவர்களும் விழாவில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior