உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 26, 2011

கடலூரில் கோடை விடுமுறை குதூகலம்: மாணவர்களை மகிழ்விக்கும் அண்ணா விளையாட்டு அரங்கம்


கடலூர்:

            தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இளைஞர்கள், மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு விளையாட்டுகளில் கோடைகால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

               பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மிகப் பெரும் அழுத்தத்தில் இருந்தும், பரபரப்பில் இருந்தும் இப்போது விடுபட்டு இருக்கிறார்கள். ஏனைய மாணவர்களுக்கும் கோடை விடுமுறை குதூகலத்தை கொண்டு வந்திருக்கிறது.  மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பயிற்சி முகாம்களை நடத்துகிறது கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு மேம்பட்டு ஆணைய நிர்வாகம்.  

கோடை கால பயிற்சி முகாம்கள் குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் கூறியது:  

               அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கு கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடையில் மேலும் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில், நிறைய நேரம் கிடைப்பதால் மாணவிகள் வந்து கலந்துகொள்ளலாம்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிதாக நீச்சல் கற்றுக் கொள்வோருக்கு, அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 15-ம் தேதிமுதல் நீச்சல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

               15 நாள்களுக்கு பயிற்சிக் கட்டணம் ரூ. 250.  மே 2-ம் தேதிமுதல் மே 22-ம் தேதி வரை 16 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து மற்றும் அத்லெடிக் விளையாட்டுகளுக்கு இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பயிற்சிக்கு வருவோருக்கு முட்டை, பால் வழங்கப்படும்.  மே 8 முதல் மே 22 -ம் தேதி வரை கடலூர் மண்டல, மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுகளில் முதல் 3 பரிசுகளைப் பெற்ற 6,7,8 வகுப்பு மாணவ மாணவியருக்கு, இலவச உணவு, தங்கும் வசதியுடன் விளையாட்டு அரங்கத்திலேயே தங்கவைத்து, சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். 

 யோகா பயிற்சி குறித்து யோகா பயிற்சியாளர் வெற்றி கூறியது:  

              கடலூர் அண்ணா விளையாட்டு அரங்க மாடியில் சிறப்பு யோகா பயிற்சி முகாம், கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்படுகிறது. காலை 5-45 முதல் 7-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5-30 மணி வரையிலும் அனைத்து வயதினருக்கும் பயிற்சி அளிக்கப்படும். கட்டணம் 30 நாள்களுக்கு ரூ. 200. யோகா பயிற்சி, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனியார் அமைப்புகள் நடத்தும் பயிற்சிகளை விட அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கட்டணம் மிகவும் குறைவு என்றார் வெற்றி.  டென்னிஸ், கிரிக்கெட் விளையாட்டுகளிலும், அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கோடை விடுமுறையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

               அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஷட்டில், பேட்மிண்டன் சிறப்புப் பயிற்சி அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. ஷட்டில் விளையாட்டு சங்கம் நடத்தும் இப்பயிற்சியில் சேர உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 100.  அனைத்து பயிற்சிகளிலும் சேர்ந்து பயனடைய கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை அணுகலாம்.    



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior