உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 16, 2011

22 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றிருக்கும் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன்

நெய்வேலி:

          குறிஞ்சிப்பாடித் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  அரசியல் களத்தில் 22 ஆண்டுகால போராட்டத்துக்கு பின் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையை எட்டியிருப்பதால் அவரது குடும்பம் மட்டுமின்றி அவரது பெயரோடு சேர்ந்திருக்கும் சொரத்தூர் கிராம மக்களும் கட்சி பேதமின்றி மிகுந்த சந்தோஷத்தில் காணப்படுகின்றனர்.

               கடந்த 1989-ம் ஆண்டு முதன்முதலாக குறிஞ்சிப்பாடித் தொகுதியில் அதிமுக ஜெ. அணி சார்பில் களமிறங்கிய சொரத்தூர் ராஜேந்திரன், திமுக வேட்பாளர் கணேசமூர்த்தியிடம் தோல்வியுற்றார். அதைத் தொடர்ந்து 1996-ல் பண்ருட்டியில் போட்டியில் திமுக வேட்பாளர் ராமசாமியிடமும், 2006-ம் ஆண்டு அதே பண்ருட்டியில் பாமக வேட்பாளர் வேல்முருகனிடம் 145 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவினார். இதோடு நில்லாமல் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வேங்கடபதியிடம் தோல்வியுற்றார். 

              அரசியல் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்ட ராஜேந்திரனுக்கு தொடர் தோல்வியே. இதனால் கட்சியினர் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் ராஜேந்திரனுக்கு அனுதாபம் நிலவியது.ராஜேந்திரன் போட்டியிடும் போதெல்லாம் அதிமுகவும் தோற்கும், அவரும் தோற்றுப் போவார் என்ற சென்டிமென்டான விஷயம் கடலூர் அரசியல் பிரமுகர்களிடையே பரவலாக பேசப்படும். அதற்கேற்றவாறு அவர் போட்டியிட்ட போதெல்லாம் அதிமுக தோல்வியடைந்தது என்னவோ உண்மை தான். 

              ஆனால் அவரது விசுவாசிகளோ கட்சி ஜெயிக்கும் என்ற நிலை இருக்கும் போது ராஜேந்திரனுக்கு சீட் தரமாட்டார்கள், தோற்கின்ற சமயத்தில் சீட் வழங்குவார்கள் என்று கூறி வந்தனர்.பல்வேறு சென்டிமென்ட் விஷயங்களுக்கு அதிமுக தலைமை முக்கியத்துவம் தரும் என்ற கருத்து நிலவிவரும் வேளையில் அதிமுக தலைமை 5-ம் முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ராஜேந்திரனுக்கும் வழங்கியது. அதுவும் குறிஞ்சிப்பாடியிலேயே வழங்கியது. 

                     குறிஞ்சிப்பாடியில் தொடர்ந்து 3 முறையாக போட்டியிட்டு பல்வேறு நலத் திட்டப் பணிகளை செய்து தொகுதி வாசிகளை வளைத்து வைத்திருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை, ராஜேந்திரன் வெல்வது கடினம் தான் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.இந்நிலையில் சொரத்தூர் ராஜேந்திரன் தன்னை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை 23 ஆயிரத்து 848 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். 

              அரசியல் களத்தில் முதன்முதலாக குறிஞ்சிப்பாடித் தொகுதியில் சோதனையை தொடங்கி அதில் சறுக்கிய ராஜேந்திரன், தொடர்ந்த போராடி 22 ஆண்டுகளுக்குப் பின் அதே குறிஞ்சிப்பாடியில் வெற்றிக்கனியை பறித்திருப்பது சாதாரணமானது அல்ல என்பதை அவர் உணர்ந்திருக்கக் கூடும்.எனவே தொகுதியை தக்க வைத்துக் கொள்ள இனி தான் அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும் அதை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக் கையாண்டால் தான் அவரது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது தொகுதியில் உள்ள மூத்த வாக்காளர்களின் கருத்து.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior