உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 16, 2011

கடலூர் மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்களில் 7 பேர் புதுமுகங்கள்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள 7 பேர், சட்டப்பேரவைக்கு புதுமுகங்கள் ஆகும். 

            கடலூர் மாவட்டத்தில் கடலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் (அ.தி.மு.க.), குறிஞ்சிப்பாடி தொகுதியில் சொரத்தூர் ராஜேந்திரன் (அ.தி.மு.க.), நெய்வேலி தொகுதியில் சிவசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் முருகுமாறன் (அ.தி.மு.க.), புவனகிரி தொகுதியில் செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.), சிதம்பரம் தொகுதியில் கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பண்ருட்டி தொகுதியில் சிவக்கொழுந்து (தே.மு.தி.க.), விருத்தாசலம் தொகுதியில் முத்துக்குமார் (தே.மு.தி.க.), திட்டக்குடி தொகுதியில் தமிழழகன் (தே.மு.தி.க.) ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

             இவர்களில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான எம்.சி. சம்பத், செல்வி ராமஜெயம் ஆகியோர் மட்டுமே ஏற்கெனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள். சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், முருகுமாறன், தமிழழகன், முத்துக்குமார், சிவக்கொழுந்து, கே.பாலகிருஷ்ணன், ஆகிய 7 பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு சட்டப் பேரவைக்குச் செல்கிறார்கள். இவர்களில் நிறைந்த அரசியல் அனுபவம் பெற்றவர்களாக கே.பாலகிருஷ்ணனும், சொரத்தூர் ராஜேந்திரனும் உள்ளனர். 

                தற்போது அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்.மன்றத் துணைத் தலைவராக இருக்கும் சொரத்தூர் ராஜேந்திரன், அ.தி.மு.க. மாவட்டச் செயலராகவும் இருந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். இருவரும் சட்டப்பேரவை செல்வது தொகுதி மக்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பது அவர்களது தொகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. கடலூர் வறட்சி, மழை, வெள்ளம், சேதம் எனப் பல்வேறு பிரச்னைகளைக் கொண்ட, விவசாய மாவட்டமாக இருந்த போதிலும், விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகள் சட்டப் பேரவைக் கூட்டங்களில் பேசப்பட்டது இல்லை என்பது கடலூர் மாவட்ட விவசாயிகளின் மனக்குறை. 

                அந்தக் குறையை பாலகிருஷ்ணன் போக்குவார் என்ற நம்பிக்கை மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது ஏற்பட்டு உள்ளது. பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து தே.மு.தி.க. கடலூர் மாவட்டச் செயலராக இருக்கிறார். மற்ற 4 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கட்சிகளில் சிறிய பொறுப்புகளில் இருப்பவர்கள்.புதிய எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளின் பிரச்னைகளை, சட்டப் பேரவையில் எடுத்துரைக்கும், மாண்பை, அத்தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். கடந்த பல தேர்தல்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் என்ற நிலை இருந்தது இல்லை. 

             ஆனால் இந்தத் தேர்தலில் 9 பேரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களாக இருப்பது, கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் என்று கடலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா 9 எம்.எல்.ஏ. க்களும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior