உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 20, 2011

கடலூர் மாவட்டத்தில் வேரூன்றிய தேமுதிக

நெய்வேலி:

             தேமுதிகவுக்கு முதன்முதலில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை அனுப்பியது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருத்தாசலம் தொகுதி. தற்போது மீண்டும் தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கியதோடு நில்லாமல், கடலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து, கடலூர் மாவட்டம் ஜாதிக் கட்சிக்கான மாவட்டம் அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

               2006-ம் ஆண்டு முதன்முதலாக தேர்தலை சந்தித்த தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் மட்டும் அதன் தலைவர் விஜயகாந்தை வெற்றி பெறச் செய்தது. அதுவும் பாமக கோட்டை எனக் கருதப்பட்ட விருத்தாசலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தற்போது நடந்த தேர்தலில் விஜயகாந்த் தொகுதி மாறி விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நின்று வெற்றி பெற்றார். விருத்தாசலத்தில் தனது கட்சியைச் சேர்ந்த முத்துக்குமாரை போட்டியிடச் செய்து சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளார். 

          இந்த வெற்றி, விஜயகாந்தின் கடந்த கால செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.விருத்தாசலம் தொகுதிவாசிகள், ஒரே கட்சிக்கு தொடர்ந்து மறுமுறை வாய்ப்பளித்தது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே. (1980, 1984-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தியாகராஜன் மட்டுமே தொடர்ச்சியாக இருமுறை வெற்றி பெற்றிருகிறார்.) தற்போது அத்தகைய வாய்ப்பை தேமுதிக பெற்றுள்ளது. இதில் வேட்பாளர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளார்.விருத்தாசலத்தில் தேமுதிக மீண்டும் வெற்றி பெற காரணிகளாக கருதப்படுவது. 

            விஜயகாந்த் வெற்றி பெற்றவுடன், தனது சொந்தச் செலவில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்தது லாரி மூலம் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தது. இது கிராம மக்களிடையே விஜயகாந்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது.இது தவிர்த்து விருத்தாசலம் தொகுதிக்குள் இளைஞர்களின் நலன் கருதி தொடங்கப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள், தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி உள்ளிட்டவை தொகுதி வாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

             தொகுதிக்குள் அடிக்கடி வர முடியவில்லை என்றாலும், தொகுதிக்கான அலுவலகத்தில் ஒரு உதவியாளரை நியமித்து தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டது, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுக்கான நிதியை முழுமையாக முறையாக பயன்படுத்தியது என பல்வேறு நடவடிக்கைகள் தொகுதிவாசிகளிடையே அவர் மீது நம்பகத்தன்மையை அதிகரித்தது என்றால் மிகையில்லை. விஜயகாந்த் மேற்கொண்ட நலத் திட்டப் பணிகளுக்கு, அப்போது ஆளும்கட்சியாக இருந்த திமுக சார்பில் ஏற்படுத்தப்பட்ட தடைகளும், நகராட்சி செய்த குளறுபடிகளும் தொகுதிவாசிகளை முகம் சுளிக்க வைத்தது. 

              நகராட்சியின் செயல்பாடும் விஜயகாந்தின் எதிர்ப்பையே கையாண்டதால் ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது தொகுதிவாசிகள் வெறுப்படைந்தனர்.இதன் பாதிப்பு தற்போது கடலூர் மாவட்டம் முழுக்க எதிரொலித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 3 வேட்பாளர்களும் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். முதலில் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அங்கீகாரம் பெற்ற தேமுதிகவை தற்போது 3 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர் கடலூர் மாவட்ட மக்கள்.

            இதன்மூலம் கடலூர் மாவட்டம் எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வந்த இரு சமுதாயத்தைச் சேர்ந்த கட்சிகளை மாவட்ட மக்கள் புறக்கணித்திருப்பதோடு, தேமுதிகவுக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர் கடலூர் மாவட்ட மக்கள். கிராமங்களில் நன்கு வேரூன்றி இருóநத இரு சமுதாயக் கட்சிகளின் இடத்தை தற்போது தேமுதிக கைப்பற்றியுள்ளது.தேமுதிகவுக்கு கடலூர் மாவட்ட மக்கள் வழங்கிய அங்கீகாரத்தை விஜயகாந்த் தக்க வைத்துக் கொள்வாரா? பாமகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் முதன் முதலில் அங்கீகாரம் வழங்கியது கடலூர் மாவட்டம் தான். அக்கட்சிகளின் செயல்பாட்டால் அங்கீகாரம் இன்று கேள்விக் குறியாக்கியிருக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior