உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 20, 2011

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி ரகசியம்!

சிதம்பரம்:

             சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாண்டையாரின் எதிர்ப்பை பயன்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பிரசார வியூகத்தினால் வெற்றி பெற்றது.

            சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீதர் வாண்டையாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் 2,879 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் ஆகிய பலம் வாய்ந்த கட்சிகள் அடங்கிய கூட்டணியில் ஸ்ரீத்ர் வாண்டையார் போட்டியிட்டார். ஆரம்பத்தில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கியதால் திமுக, பாமக, காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. 

         ஸ்ரீதர் வாண்டையார் திமுக, பாமக, காங்கிரஸ் நிர்வாகிகளை நேரில் சந்தித்து அதிருப்தியை சரி செய்தார். சிதம்பரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு உள்ளது என உளவுத் துறையினர் திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது போட்டியாளருக்கு சீட் கிடைக்கக்கூடாது என இத்தொகுதியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கியதாகவும், கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. துரை.கி.சரவணனுக்கு சீட் கிடைக்ககூடாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முயற்சியால் இத்தொகுதி அப்போது கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியதாகவும் துரை.கி.சரவணன் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

          இதனால் கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளரும், மாவட்டச் செயலருமான ஏ.அருண்மொழிதேவன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மதிமுக பிரமுகர் பழனிவேல் கொலை வழக்குக்கு பிறகு பாமகவுக்கும், ஸ்ரீதர் வாண்டையாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள், பகைமையும் இருந்து வந்தது. 

          இந்நிலையில் இத்தேர்தலில் பாமக நிறுவனர் ச.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் கூட்டணியில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். திமுக, பாமகவினர் அதிருப்தியை பயன்படுத்தி தனது பிரசார வியூகத்தை அமைத்து கிராமப்புறங்களில் திண்ணை பிரசாரம், கலை நிகழ்ச்சிகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரம் செய்தனர். 

            மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் கோவி.மணிவண்ணன் உள்ளிட்ட வன்னியர் சமூகத்தினர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக களத்தில் இறங்கி தேர்தல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.பண பலமின்றி பிரசார வியூகத்தின் மூலம் அதிமுக ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,879 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதுதான் உண்மை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior