
சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் வசிக்கும் ஓட்டுவீடு.
சிதம்பரம்:
தமிழக அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக உள்ள செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டை அகரத்தில் உள்ள பழைய ஓட்டு வீட்டில்தான் வசித்து வருகிறார்.
பரங்கிப்பேட்டை அதிமுக ஒன்றியச் செயலராக இருந்த தனது கணவர் ராமஜெயம் 1985-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தவர் செல்வி ராமஜெயம். அதன் பிறகு பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவராக இருமுறை தேர்வு செய்யப்பட்டார். தனது கணவர் ராமஜெயத்தின் மாடி வீடு உள்ளது. இருப்பினும் தனது தாயாருடன் பூர்வீக வீடான ஓட்டுவீட்டிலேயே வசித்து வருகிறார். கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை இவர் தோற்கடித்தார்.
மீண்டும் தற்போது அதே தொகுதியில் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வனை 13,117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தொகுதியில் கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இவர் மீது எவ்வித அதிருப்தியும் கிடையாது. கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தவறாமல் பங்கேற்று விடுவார், யாரிடமும் எவ்வித பகைமையும் கிடையாது என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். எளிமையாக வாழ்ந்து வரும் செல்வி ராமஜெயம் எளிமையான அமைச்சராக வலம் வருவார் என தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக