இந்தியாவிலேயே முதன்முறையாக கோழியின உற்பத்திக்கென, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பி.டெக். தொழில்நுட்ப பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இளநிலை பட்டப் படிப்பு, கோழிப் பண்ணைத் தொழில் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் கே.சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 1960-களில் புறக்கடையில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள், இப்போது ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 கோடி வரை வருமானம் ஈட்டும் தொழிலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இப்போது உள்ள கோழிகளின் எண்ணிக்கை 489 மில்லியன். இவற்றின் மூலம் ஆண்டுக்கு 589 மில்லியன் முட்டைகளும், 2.2 மில்லியன் டன் கோழி இறைச்சியும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பட்டப் படிப்பு சென்னை அருகே உள்ள கொடுவள்ளியில் செயல்பட்டு வரும் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப நிலையம், மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் இயங்கிவரும் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் ஆகியவற்றில் வரும் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
இந்தப் படிப்பில் ஆண்டுக்கு 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். இப்படிப்பில் சேருவதற்கு பள்ளி மேல்நிலைத் தேர்வில் கணிதம், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்புகள்: பொறியியல் சார்ந்த கோழியின உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் மேலாண்மை போன்றவற்றில் நிறைந்த கல்வி அறிவு மற்றும் பயிற்சி அளிக்கப்படுவதால், இந்த படிப்பை முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. கோழி இனப்பெருக்க பண்ணைகளிலும், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைப் பதவிகளிலும் பணியமர்த்தப்படுவார்கள்.
கோழியின உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வடிவமைப்பு, ஆராய்ச்சி, வளர்ச்சி, கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திர தயாரிப்பில் பணியமர்த்தப்படுவர். வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், இந்திய ஆட்சிப் பணி போன்ற பல்வேறு அரசுத் துறை சார்ந்த நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. கோழிப் பண்ணைத் தொழிலில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், இப்பட்டப் படிப்பு முடித்து வரும் பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக