கடலூர் :
கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் "சிட்டா' கிடைக்காமல் பொதுமக்கள் கடந்த நான்கு நாட்களாக அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வங்கியில் கடன் பெறவும், பல்வேறு அரசு சலுகைகளை பெறவும் சிட்டா நகல் தேவைப்படுகிறது. இதை கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறுவதற்கு காலதாமதம் ஆவதை தடுக்க அரசு கம்ப்யூட்டர் மூலம் எளிதாக சிட்டா வழங்கும் முறையை கொண்டு வந்தது. இதன் பயனாக எந்த ஊரில் இருந்தாலும் உரிமையாளர்கள் தமது நிலத்திற்கான "சிட்டா' வை எடுத்துக்கொள்ளலாம். கடலூரில் கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி காலத்தில் "சிட்டா' பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.
ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் தொடுதிரை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான "சிட்டா' மற்றும் இதர விவரங்கள் பெற்றுச் செல்ல எளிய முறையை துவக்கி வைத்தார். இந்நிலையில் கடலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாக பொதுமக்கள் "சிட்டா' கேட்டு காத்துக் கிடந்தனர். ஆனால் இதற்கான தொடுதிரை அறை திறக்கப்படாமல் இருந்தது. அப்படியே திறந்தாலும் அதற்குரிய ஊழியர் இருப்பதில்லை. இது பற்றி கேட்டால் பிரிண்டரில் டோனர் இல்லை. பிறகு வாருங்கள் என கூறி அனுப்புகின்றனர். இப்படியே கடந்த நான்கு நாட்களாக பொதுமக்கள் "சிட்டா' கிடைக்காமல் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து ஊழியர்கள் பணியை சரிவர செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக