கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமைக் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை உள்ளோருக்கு சிறப்பு எழுத்தர் பயிற்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
பொதுவாக காவல் நிலையங்களில் எழுத்தர் (ரைட்டர்) பணி மிகவும் முக்கியமானது. காவல் நிலையங்களே பெரும்பாலும் எழுத்தர்களால்தான் இயக்கப்படும் என்று கூறுவது உண்டு. அந்த அளவுக்கு எழுத்தர் பணி முக்கியத்துவம் வாய்ந்ததும், எழுத்தர் பணிபுரிவோர் பன்முகத் தன்மை கொண்ட திறமையானவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. ஆனால் காவல் நிலையங்களில் அத்தகைய நிலை குறைந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் பணி ஓய்வுபெற்ற தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் பிரிவுபசார விழாக்களில் பேசுகையில், எழுத்தர் பணிக்கு போதிய பயற்சி இல்லை, பலர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்றப் பத்திரிகை தயாரிக்கவும் இயலாதவர்களாக, அனுபவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டி வருகின்றனர். இதனால் பல வழக்குகளில் புலனாய்வு சரியாக இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், காவல் நிலைங்களில் பணிபுரியும் தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு எழுத்தர் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளார். பயிற்சி முகாம் தொடக்க விழா திங்கள்கிழமை நடந்தது.
விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்.கூறியது:
காவல் நிலையங்களில் தலைமைக் காவலர்கள் பொறுப்பேற்கும் எழுத்தர் பணி பன்முகத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகை தயாரித்தல் போன்ற எழுத்துப் பணிகளில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அந்த நிலை கொஞ்ச காலமாக மாறி வருகிறது. இதனால் வழக்குகளில் புலனாய்வில் குறைபாடு ஏற்படுகிறது. நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காவல் துறை கணக்கின்படி 3 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் 9 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றங்கள் தெரிவிக்கின்றன. காவல் நிலையங்களில் எழுத்தர் பற்றாக்குறை அதிகம் உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்களிலும் பணிபுரிவோரில், ஒரு காவல் நிலையத்தில் தலா 5 பேராவது எழுத்தர் பணிக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்களாக இருக்கும் வகையில், இப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் முதல் தகவல் தயாரித்தல், குற்றப் பத்திரிகை தயாரித்தல், சாட்சியங்கள் பதிவு செய்தல், வழக்குகளில் புலனாய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பயிற்சி அளிக்கப்படும். வழக்கறிஞர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை வல்லுநர்களைக் கொண்டும் இப்பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக 80 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப் படுகிறது. ஒரு விபத்து நிகழ்ந்தாலோ, குற்றச் செயல்கள் நிகழ்ந்தாலோ, வழக்குகளுக்காக எத்தகைய அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பது பற்றி, இப்பயிற்சியில் செயல் விளக்கமும் அளிக்கப்படும் என்றார் எஸ்.பி. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அருணாசலம், காவல் துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக