கடலூர் :
"ஐநூறு ரூபாய் கொடுத்தால், உடனடியாக ஜாதிச் சான்று கிடைக்கும்' என, கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த, "பிட் நோட்டீஸ்' பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைகேட்கும் கூட்ட அரங்க வளாகம் அருகே, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக நுழைவாயிலில், நேற்று காலை, கையால் எழுதப்பட்ட, "பிட் நோட்டீஸ்' ஒட்டப்பட்டிருந்தது. அதில், "எம்.பி.சி., ஜாதிச் சான்று, "அர்ஜென்ட்' ஒரு நாள், ரூபாய் 500. எம்.பி.சி., ஜாதிச் சான்று, 'ஆர்டினரி' 2 நாள், ரூபாய் 200. உடன் அணுகவும், துணை வட்டாட்சியர் பழனி, கடலூர்' என எழுதப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், இந்த நோட்டீசை படிக்க கூடியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர், அந்த நோட்டீசை கிழித்து அப்புறப்படுத்தினார்.
இதுகுறித்து, நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்த துணை தாசில்தார் பழனி கூறுகையில்,
"ஜாதிச் சான்று வழங்க பணம் எதுவும் வாங்குவதில்லை. ஆள் பற்றாக்குறை காரணமாக, சற்று தாமதமாக வழங்கப்படுகிறது. இதனால் பாதிக் கப்பட்டவர் எவரேனும், இந்த நோட்டீசை ஒட்டியிருக்கலாம். இருப்பினும், இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரிக்கப்படும்' என்றார்.
பின் குறிப்பு :
பள்ளி, கல்லூரி திறந்தாலே இது ஒரு பெரும் பிரச்சனை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக