உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 25, 2011

கடலூர் சிப்காட் பகுதி மக்களுக்கு புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்

கடலூர்:

           கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி, புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
  
வியாழக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தலைமையில் நடந்த, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் தெரிவித்த கருத்துகள்:

              கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து மழைநீர் வெளியேற, வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரசாயனக் கழிவுகள் வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வடிகால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீரை மாசுக் கட்டுபாடு வாரியம் அடிக்கடி சோதனையிட வேண்டும். 

             அத்தகைய வடிகால்களை, பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும். கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வயதானோர் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பு, 2 ஆயிரம் மடங்கு அதிகம் இருப்பதாக, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.எனவே புற்றுநோய் ஆய்வில் ஈடுபடும் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இப்பகுதி மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு சுத்தமான காற்று கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

             பல தொழிற்சாலைகள் ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்களை அனுப்பி வைக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது.எனவே ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும். ஆபத்தான ஆலைகள் பட்டியலில் உள்ள பல ரசாயனத் தொழிற்சாலைகள், பல ஆண்டுகளாக அனுமதி பெறாமல் இயக்கப்படுகின்றன. அனுமதி பெறாத ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் ரசாயனப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டாங்கர் லாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

              ரசாயன தொழிற்சாலைகளில் அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சிப்காட் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் கண்டு, தனியாக வேலி அமைத்து மரங்களை வளர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டு மேற்கொண்ட, காற்றில் பரவும் ரசாயனங்கள் குறித்த ஆய்வு விவரங்களை, மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior