மேல்முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் திருத்திய நிர்ணய விவரங்களை கட்டண நிர்ணயக் குழுவின் சிறப்பு அலுவலர் அ.திருஞானசம்பந்தம் திங்கள்கிழமை வெளியிட்டார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் இந்தக் கட்டண விவரங்கள் திங்கள்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டண விவரங்கள் செவ்வாய்க்கிழமை காலைக்குள் தெரிவிக்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் ஏற்கெனவே அறிவித்த கட்டணத்தைவிட சராசரியாக 5சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கட்டண நிர்ணய விவரங்கள் புதன் அல்லது வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 10,954 பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு கல்விக் கட்டணம் நிர்ணயித்தது. இதில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுமார் 6,400 தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்தன. நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு இந்த மனுக்களை நவம்பர் 15 முதல் மே 4-ம் தேதிவரை விசாரித்தது. இந்த விசாரணைக்குப் பிறகு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு, இப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டுள்ள செய்தி:
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் மேல்முறையீடு செய்திருந்தன. மேல்முறையீடு செய்த ஒவ்வொரு பள்ளியிடமிருந்தும் பெறப்பட்ட வினாப்பட்டியல், மேல்முறையீட்டின் போதும், நேர்முகக் கேட்பின் போதும் பெறப்பட்ட ஆவணங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப் பெற்று, தணிக்கையாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
பள்ளி அமைவிடம், மாணவர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்-பணியாளர் ஊதியம், நிர்வாக, பராமரிப்புச் செலவுகள் இவையனைத்தும் மறுகட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணிகளாகக் கொண்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண நிர்ணயம் வரும் 2012-13 கல்வியாண்டு வரை பொருந்தும். அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகளுக்கு சராசரியாக 30 முதல் 40 சதவீதம் வரை கட்டண உயர்வை எதிர்பார்க்கிறோம். கட்டண உயர்வு அதற்குக் குறைவாக இருந்தால் மேல்முறையீடு செய்வோம்' என்று மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் என்.விஜயன் தெரிவித்தார்.
இணையதளத்தில் வெளியீடு:
திருத்திய கட்டண நிர்ணய விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கான பணிகளில் கட்டண நிர்ணயக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதன் அல்லது வியாழக்கிழமை இந்தக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக