மீன் பிடிக்கச் செல்லாததால் கடலூர் துறைமுகம் உப்பனாற்றில், முடங்கிக் கிடக்கும் விசைப் படகுகள்.
கடலூர்:
கடலூரில் கடந்த 15 தினங்களாக மீன்பிடித் தொழில் முடங்கிக் கிடக்கிறது. 70 கி.மீ. நீளம் உள்ள கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சம் மக்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
இவர்களில் பலர் மிகப்பெரிய விசைப் படகுகளில், கூலிக்கு மீன்பிடித் தொழில் செய்பவர்கள். பலர் மீன் பதப்படுத்தும் தொழில் செய்வோர். 5 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகளும், கட்டுமரங்களும் உள்ளன. ÷டலூரில் நாளொன்றுக்கு 100 டன் மீன்கள் சர்வ சாதாரணமாகக் கிடைத்து வந்தது. ஆனால் கடலூர் கடற்கரையை, பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகும், சுனாமி கடற்சீற்றத்தைத் தொடர்ந்தும், கடலூர் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
ரூ. 25 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட எஃப்.டி.பி. படகு ஒன்றில், (கடலூரில் இத்தகைய படகுகள் 100 உள்ளன), ஆழ்கடலில் 6 தொழிலாளர்களுடன் 7 நாள்கள் தங்கி மீன்பிடிக்க, டீசல், ஆள்கூலி உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது. ÷இதில் குறைந்தபட்சம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான மீன்கள் கிடைத்தால்தான் கட்டுபடியாகும். ஆனால் பல நேரங்களில் அவர்களுக்குச் செலவுத் தொகைக்கான மீன்கள்கூட கிடைப்பது இல்லை என்கிறார்கள் மீனர்கள். ÷கடலூரில் கடந்த 15 தினங்களாக மீன்பிடித் தொழில் பெரும்பாலும் முடங்கிக் கிடக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற பல பெரிய விசைப் படகுகள், வெறுங்கையாகத் திரும்பின.
தொடர்ந்து ரூ. 75 ஆயிரம் செலவு செய்து, கடலுக்குள் சென்று நஷ்டம் அடைவதைவிட, தொழிலுக்குச் செல்லாமல் இருந்து விடுவதே மேல் என்ற எண்ணத்தில், பல படகுகள் கடந்த 15 தினங்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் உப்பனாற்றில் முடங்கிக் கிடக்கின்றன என்கிறார்கள் மீனவர்கள். ÷ஏனைய சிறிய விசைப் படகுகள், கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களின் நிலையும் இதுதான் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த 15 நாள்களாகவே வங்கக் கடலில் மாறிமாறி வரும் நீரோட்டம், மீன்பிடித் தொழிலுக்குச் சாதகமாக இல்லை என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறியது:
கடலூர் கடலில் கடந்த 15 நாள்களாக மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. பல படகுகள் பெரும் தொகையை செலவிட்டு கடலுக்குள் சென்று, மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பும் நிலை நீடித்து வருகிறது. வியாழக்கிழமை 10 சதவீதம் படகுகள் மட்டுமே மீன் பிடிக்கச் சென்றன. அவற்றிலும் சரியாக மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் மீன்பிடித் தொழிலில் கூலிகளாகப் பணிபுரிவோர் வறுமைக்குத் தள்ளப்படும் நிலை உருவாகி விட்டது. மாறி மாறிவரும் கடல் நீரோட்டத்தால் மீன்கள் கிடைக்க வில்லை.
பல ஆண்டுகளுக்கு முன், வங்கக் கடலில் எந்தெந்த இடங்களில், எவ்வளவு தூரத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கும், நீரோட்டம் சாதகமாக உள்ளதா? கடல் அலைகள் எந்த அளவுக்கு உள்ளன? என்றெல்லாம், மீன் வளத்துறை முன் அறிவிப்பு அளித்து வந்தது. ஆனால் இந்தத் தகவல்கள் எல்லாம் தற்போது கிடைப்பது இல்லை. தனியார் பொதுநல அமைப்பு ஒன்று, இத்தகைய தகவல்களை சில ஆண்டுகள் தெரிவித்து வந்தன. அதுவும் தற்போது இல்லை என்றாகிவிட்டது.
மீனவர்கள் அவர்களின் அனுபவம் மற்றும் அனுமானத்தின் பேரில் கடலுக்குள் செல்வதும், மீன்கள் கிடைத்தால் லாபம் இல்லையெனில் நஷ்டம் என்ற சூதாட்டம் போன்ற நிலையில்தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் வாழ்க்கை உள்ளது. பருவநிலை மாற்றங்களும், கடலில் கலக்கப்படும் ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது என்றார் சுப்புராயன். மீன்பிடித் தொழில் பாதிப்பு காரணமாக, கடலூரில் மீன்களின் விலை உயர்வு, மக்களின் வாங்கும் சக்திக்கு மீறியதாக மாறி விட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக