உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 27, 2011

கடலூர் மாவட்டத்தில் சமச்சீர் புத்தகம் கோரி மாணவர்கள் மறியல்

விருத்தாசலத்தில் சமச்சீர் பாடப்புத்தகம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள். (வலது படம்) மறியலில் ஈடுபட்ட அரசு பெண்கள் மேல்நிலை  பள்ளி மாணவர்கள்.
விருத்தாசலம்:

             கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சமச்சீர்ப் புத்தகம் வழங்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு, சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
 இந்திய மாணவர் சங்கம்: 
            விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து, பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் அசோகன் தலைமை ஏற்றார். 
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்: 
                 அமைப்பின் சார்பில் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் சமச்சீர் கல்விப் புத்தகம் தொடர்பான துண்டறிக்கைகளை வழங்கினர். பின்னர், உணவு இடைவேளையின்போது வெளியில் வந்த 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் செந்தாமரைக்கந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.
மங்கலம்பேட்டை: 
               மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் மறியல் செய்தனர். இதனால் 20 நிமிடத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: 
            பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சார்பில், நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வழக்கறிஞர்கள் அம்பேத்கார், சந்திரசேகரன், ரெங்கநாதன், பட்டி. முருகன், மணிகண்டராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
கடைசிவரை வராத பெண் காவலர்கள்: 
            விருத்தாசலத்தில் கடந்த சில நாள்களாகவே சமச்சீர் கல்வி தொடர்பாக பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்பாக உளவுத் துறை போலீஸார் காவலர்களுக்கு தகவல் கொடுத்திருப்பர். இந்நிலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உணவு இடைவேளையின்போது 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மறியல் செய்தனர் .தகவலறிந்த காவல் ஆய்வாளர் சீராளன், சில போலீஸார் மற்றும் பயிற்சி காவலர்கள் வந்தனர். ஆனால் கடைசி வரை பெண் போலீஸார் சம்பவ இடத்துக்கு வரவே இல்லை. மாணவிகள் வகுப்புக்குச் சென்ற பின் ஒரே ஒரு பெண் காவலர் வந்தார்.
கடலூர்
               கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் செவ்வாய்க்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர் .ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க, கடலூர் நகரச் செயலர் ஆர்.பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அரசன் தொடங்கி வைத்தார். நகரத் தலைவர் இளங்கோ, கல்லூரி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் புரட்சிநாதன், அழகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
             இந்திய மாணவர் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னர் முக்கிய நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதியை சந்திக்கு மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு, நகரச் செயலர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வினோத், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior