கடலூர்:
கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து போகிறார்கள். ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே குடியிருப்பில் உள்ளவர்களின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, ரயில்வே அதிகாரிகள் தினமும் பாடாய்படுகிறார்கள். இப் பிரச்னையை போக்க நகராட்சி ஆவன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திருப்பாப்புலியூர் ரயில் நிலைய வளாகத்தில், ரயில்வே அதிகாரிகள் ஊழியர்களுக்கான குடியிருப்பும் உள்ளது. 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. 2002-ம் ஆண்டு வரை ரயில் நிலைய வளாகத்துக்குள், 3 நகராட்சி குடிநீர் இணைப்புகள் இருந்தன. அதன்பிறகு இந்த குடிநீர் இணைப்புகள் மூடப்பட்டதே குடிநீர் பிரச்னைகளுக்கு காரணம் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். 2004-ம் ஆண்டில் ஒரு இணைப்பு மட்டும் சரிசெய்யப்பட்டது. அதுவும் ஒரு மாதம் வரை குடிநீர் வழங்கியது. பின்னர் ஏனோ துண்டிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து பலமுறை கடலூர் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்கிறார்கள்.
ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரயில்வே அதிகாரிகள் தினமும், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நீர்தான் குடியிருப்புப் பகுதிக்கு விநியோகிக்கப்படுகிறது. ரயில் பயணிகளின் தேவைக்கு சின்டெக்ஸ் தொட்டிகளில் நிரப்பப் படுகின்றன. தண்ணீர் டிராக்டர் வருவதில் தாமதம் ஏற்பட்டாலோ, வராமல் போனாலோ அனைவரின் பாடும் அவஸ்தைதான். மேலும் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டு வந்து நிரப்பப்படும் குடிநீரை, அருகில் உள்ள குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் செல்வதுடன், குளிர்ந்த நீர் வழங்கும் ஃபிரீசரையே உடைத்து விட்டனராம். இதனால் ரயில் நிலையத்தில் அடிக்கடி குடிநீர் பிரச்னை ஏற்படுகிறது.
அண்மையில் ரயில்வே அதிகாரிகள் நகராட்சியைத் தொடர்பு கொண்டபோது 2002-ம் ஆண்டு முதல் இதுவரை உள்ள குடிநீர் பாக்கி கட்டணத்தை செலுத்தினால், குடிநீர் இணைப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனராம். ஆனால் அத்தொகையை செலுத்துவது சாத்தியம் அல்ல என்பதால், நகராட்சி குடிநீர் இணைப்பு பெறும் முயற்சியையே கைவிட்டு விட்டனராம். கடலூர் நகரில் மிகுந்த சிரமத்துடன்தான் மக்களுக்கு நகராட்சி குடிநீர் வழங்கி வருகிறது. எனினும் நகரில் பல இடங்களில், குடிநீர் அன்றாடம் வீணாகிக் கொண்டுதான் இருக்கிறது. சட்ட விரோதமாகப் பல வீடுகளில், மோட்டார் வைத்து நகராட்சிக் குடிநீரை உறிஞ்சுகிறார்கள்.
ரயில் பயணிகளும், ரயில்வே குடியிருப்பில் வசிப்போரும் கடலூர் நகர மக்கள்தானே. அவர்களுக்குக் குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் மறுப்பது ஏன் என்கிறார் தென் ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினரும், கடலூர் ரயில் பணிகள் நலச் சங்கத் தலைவருமான முனைவர் பி.சிவகுமார்.
திருப்பாப்புலியூர் ரயில் நிலைய குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து விட்டோம் என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக