உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 13, 2011

சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாலை நேர படிப்புகள்

         சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் மாலை நேர படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

                  பகுதி நேர படிப்பாக ஊடகவியல் முதுநிலை பட்டப் படிப்பும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, மாலை நேர படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால், அதன் பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பல்கலைக்கழகம் இப்போது மீண்டும் மாலை நேர படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.  

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது: 

              வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாலை நேரப் படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. மற்றும் எம்.எஸ்சி. ஜியோமெட்ரிக்ஸ் ஆகிய இரண்டு படிப்புகள் நடப்பு கல்வியாண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளன. செப்டம்பர் 15-ம் தேதி முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.  

பகுதி நேர படிப்பு: 

             இதுபோல், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பணிபுரிவோர் பயன் பெறும் வகையில் ஊடகவியலில் முதுநிலை பட்டப் படிப்பு, பகுதி நேர படிப்பாக நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

                இந்த இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புக்கு, ஆண்டுக்கு 30 நாள்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். 10 நாள்களுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டியது கட்டாயம்.

 கல்வித் தகுதி: 

                    இந்த மாலை நேர மற்றும் பகுதி நேர முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior