கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரித்தார். மங்களூர் ஒன்றியம் மா.புடையூர் கிராமத்தில் மனுநீதி நாள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் பேசியது:
அரசின் திட்டங்களைச் செயல்படுத்தவும், துறை வாரியாக திட்டங்களை அறிந்து கொள்வதற்கும் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம்கள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் தெரிந்துகொள்ள வேண்டும். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, பட்டா மாற்றம், பேருந்து வசதி உள்ளிட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி குடிநீர் கிணறு மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகியவை, சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பு கம்பி வலைகள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் கடலூர், திருவண்ணமாமலை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்தான் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. எனவே நமது மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மீறிச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ளவர்களுக்கு, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் அரசு நிதி உதவி வழங்குகிறது. பெண் குழந்தைகளின் படிப்புக்கும் பல்வேறு உதவிகளை அரசு செய்கிறது. கிராமப்புற மக்கள் அனைவரும் பெண் குழந்தைகளை பாகுபாடின்றி வளர்க்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில் பெண்களுக்கு திருமண உதவி, விவசாயிகளுக்கு இடுபொருள்கள், கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, தனிநபர் கழிப்பறை கட்ட உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட ரூ. 5.88 லட்சத்துக்கான நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் கணபதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் திருவேங்கடம், சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், ஊராட்சி மன்றத் தலைவி தெய்வராணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக