உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

கடலூர் கடற்கரையில் அதிகரித்து வரும் விஷத் தன்மை கொண்ட ஜெல் மீன்கள்


கடலூர்: 
 
             கடலூர் கடற்கரை மற்றும் உப்பனாற்றுப் பகுதிகளில், நெருப்புச் சொரி என்று மீனவர்களால் அழைக்கப்படும், ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.  
 
                 ஜெல்லி மீன்கள் விஷத் தன்மை கொண்டது. கைகளில் பட்டாலே கடுமையாக தோல் அரிப்பு ஏற்படும். ஜெல்லி மீன்களின் எண்ணிக்கை கடலூர் கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகம் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டம், பிச்சாவரம் பகுதியில் மட்டுமே தற்போது மாங்குரோவ் காடுகள் எனப்படும் சுரபுன்னைக் காடுகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன், கடலூர் மாவட்டத்தில் உள்ள உப்பனாற்றுப் பகுதிகள் முழுவதும், சுரபுன்னைக் காடுகள் அடர்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.  
 
                   அதன் எச்சங்களை தற்போதும் கடலூர், நொச்சிக்காடு, தம்பனாம்பேட்டை, மடவாய் பள்ளம், நஞ்சலிங்கம்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர உப்பனாற்றுப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிகிறது. உப்பனாற்றின் கரைகளில் உள்ள தாவரங்களின் அடர்ந்த பகுதிகளுக்குள், ஆமைகள் வந்து முட்டையிடுகின்றன. ஆனால் உப்பனாற்றுத் தாவரங்கள் தற்போது பெரிதும் அழிந்து வருகின்றன. 
 
                    இத்தாவரங்களின் அழிவுக்கு, கடலூர் மாவட்ட உப்பனாற்றுப் பகுதியை, நல்ல வடிகாலாகப் பயன்படுத்தி, ரசாயன ஆலைகள் பலவும், கழிவுகளை கலப்பதுதான் காரணம் என்கிறார்கள், மீனவர்களும் கடலோர ஆராய்ச்சியாளர்களும். கடற்கரையின் அமைதிச் சூழல் பாதிக்கப்பட்டதால், கடலூர் மாவட்டக் கடற்கரையோரங்களில், முட்டையிடுவதற்கு ஆமைகளின் வருகை, வெகுவாகக் குறைந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
                  கடல் ஆமைகள் பெரும்பாலும் ஜெல்லி மீன் குஞ்சுகளை விரும்பிச் சாப்பிடுகின்றன. ஆமைகள் வருகை குறைந்ததால் ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகின்றன.  மேலும் ஜெல்லி மீன்கள் வலைகளில் சிக்கினால் அவற்றின் விஷத் தன்மை காரணமாக, அந்த வலையை மீனவர்கள் கையாள்வதே கடினம் என்கிறார்கள் மீனவர்கள். இந்நிலையில் கடற்கரை உப்பங்கழிப் பகுதிகளில் கடல் ஆமைகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில், சுரபுன்னை, அவிசீனியா போன்ற தாவரங்களை உருவாக்கும் முயற்சியில், ஆலமரம் என்ற பொது நல அமைப்பு ஈடுபட்டு வருகிறது.  
 
                கடல் ஆமைகளின் வருகையையும் ஆய்வு செய்து வரும் இந்த அமைப்பு, இதுவரை கடலூரை அடுத்த திருச்சோபுரம், நொச்சிக்காடு, நஞ்சலிங்கம் பேட்டை, சித்திரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் சுரபுன்னை விதைகளையும், 2 ஆயிரம் அவிசீனியா தாவர விதைகளையும் நட்டு இருப்பதாக, ஆலமரம் அமைப்பின் தலைவர் இளையராஜா தெரிவிக்கிறார்.
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior